பாத்திரத் தொழிலாளர் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தொடங்க கோரிக்கை  

 


திருப்பூர் அனுப்பர்பாளையம் வட்டார பாத்திரத் தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் நிறைவேற்ற பாத்திர உற்பத்தியாளர் சங்கங்கள் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வருமாறு தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.


அனுப்பர்பாளையம் பாத்திரத் தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் கடந்த டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. எனவே புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் நிறைவேற்றுவது குறித்து கடந்த ஜனவரி 11ஆம் தேதி தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாத்திரத் தொழிலாளர் சம்பள உயர்வு கோரிக்கையை உருவாக்கி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. கூட்டுக்குழுவின் தலைவராக ஏடிபி தேவராஜ், செயலாளராக சிஐடியு கே.ரங்கராஜ், பொருளாளராக எல்பிஎப் வேலுச்சாமி, கௌரவத் தலைவராக காமாட்சியம்மன் சங்க தலைவர் டி.வி.முத்துகிருஷ்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.


இதன் தொடர்ச்சியாக பாத்திரத் தொழிற்சங்க கூட்டுக்குழு நிர்வாகிகள் கூடிப் பேசி புதிய ஊதிய உயர்வு கோரிக்கையை உருவாக்கினர். இக்கூட்டத்தில் கூட்டுக்குழு நிர்வாகிகளுடன், ஏடிபி கலைமணி, சிஐடியு குப்புசாமி, குபேந்திரன், எல்பிஎப் தர்மலிங்கம், ஏஐடியுசி செல்வராஜ், நாகராஜன், எச்எம்எஸ் திருஞானம், பாண்டியராஜ், ஐஎன்டியுசி வி.ஆர்.ஈஸ்வரன், அசோக்குமார், காமாட்சியம்மன் சங்கம் அர்ஜூனன், பிஎம்எஸ் செந்தில், சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இக்கூட்டத்தில், எவர்சில்வர் பாத்திரத் தொழிலாளர்களுக்கு 50 சதவிகிதம் ஊதிய உயர்வும், பித்தளை, செம்பு மற்றும் வாஸ்து அயிட்டங்களுக்கு 60 சதவிகிதமும், ஈயப்பூச்சு அயிட்டங்களுக்கு 70 சதவிகிதமும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை உருவாக்கப்பட்டது.


இந்த கோரிக்கை அடங்கிய கடிதத்தை தொழிற்சங்கக் கூட்டுக்குழுவினர் ஜனவரி 13ஆம் தேதி திங்களன்று எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள், பித்தளை, செம்பு பாத்திர உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் ஆகியோரிடம் வழங்கினர். இந்த புதிய ஊதிய உயர்வு கோரிக்கைகள் தொடர்பாக தொழிற்சங்க கூட்டுக்குழுவினரிடம் உற்பத்தியாளர் சங்க  நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி நியாயமான ஊதிய உயர்வை கால தாமதம் இல்லாமல் வழங்குவதற்கு முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.