திருமுருகன் கல்வி அறக்கட்டளை சார்பில் 350 ஏழை குடும்பங்களுக்கு அரிசி மளிகை பொருட்கள்


கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருப்பூரில் பனியன் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களும், ஏழை மக்களும் பொருளாதாரத்தில் பின்தங்கி உணவுக்கு வழியின்றி தவித்து வருகின்றனர்.


இந்த நிலையில் திருப்பூர் திருமுருகன் கல்வி அறக்கட்டளை சார்பில் ஏழை, எளிய குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி நெருப்பெரிச்சல், ஜி.என்.கார்டன், ஜி.என்.பாலன் நகர், ஜே.ஜே.நகர், சமத்துவபுரம், வாரணாசிபாளையம், எழில்நகர், தோட்டத்துப்பாளையம், வாவிபாளையம் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 350 ஏழை குடும்பங்களுக்கு 15 நாட்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது. இதை திருமுருகன் கல்வி அறக்கட்டளை தலைவரும், திருமுருகன் கல்வி நிறுவனங்களின் நிறுவன தலைவருமான டாக்டர் ஜி.மோகன் வழங்கினார். மேலும் சமூக இடைவெளியை கடைபிடித்தல், அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவுதல், அவசியம் இல்லாமல் வெளியே வராமல் வீடுகளில் மக்கள் தங்களை  தனிமைப்படுத்தி கொண்டு கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார். திருமுருகன் கல்வி அறக்கட்டளை சார்பில் ஏழை, எளிய குழந்தைகளுக்கு ஏற்கனவே இலவச கல்வி மற்றும் குறைந்த கட்டணத்தில் கல்வி வழங்கி வரும் நிலையில் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய குடும்பங்களுக்கு உதவி வருகிறோம் என்று டாக்டர் ஜி.மோகன் தெரிவித்தார். இதில் பா.ஜ.க. மண்டல தலைவர்கள் செந்தில், சுரேஷ், ஜி.என்.கார்டன் நகர் பகுதி நிர்வாகி என்.எஸ்.ஆர்.சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.