மருத்துவ சிகிச்சைக்கு உடனடி இ பாஸ்.. பஞ்சாயத்து தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் அரிசி பை... அசத்தும் ராதாபுரம் எம்எல்ஏ இன்பதுரை

இராதாபுரம் தொகுதி துப்புறவு பணியாளர்கள் மற்றும் மஸ்தார் பணியாளர்கள் 1200 பேருக்கு ரூ.500 மதிப்பிலான அரிசி மற்றும் மளிகை பொருட்களை இராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை வழங்கினார். தமிழகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவினால் உணவின்றி தவிக்கும் நெல்லை மாவட்டம் இராதாபுரம் தொகுதிகுட்பட்ட பேரூராட்சி மற்றும் ஊராட்சியில் பணிபுரியும்  துப்புறவு பணியாளர்கள் , குடிநீர் திட்ட பணியாளர்கள் பரப்புரையாளர்கள், மஸ்தூர் பணியாளர்கள் உட்பட 1200 பேருக்கு ரூ.500 மதிப்பிலான அரிசி மற்றும் மளிகை பொருட்களை இராதாபுரம் சட்ட மன்ற உறுப்பினர் இன்பதுரை தனது சொந்த செலவில் வழங்கினார். 


மேலும் தமிழகத்தில் முதன் முறையாக நெல்லை மாவட்டம் எல்லையான  காவல்கிணறு வாகன சோதனை சாவடியில் அவசர மருத்துவ சிகிட்சைக்காக கன்னியாகுமரி மாவட்டம் செல்பவர்களுக்கு உடனடியாக வாகன அனுமதி சீட்டு வழங்கும் முறையை இராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரையின் வேண்டுகோளுக்கு இணங்க நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷல்பா பிரபாகர் சதிஷ் நடைமுறைப்படுத்தினார். 


இதற்காக சுழற்சி முறையில் 24 மணிநேரமும்  பணியாற்ற 4 அதிகாரிகளை நெல்லை மாவட்ட ஆட்சியர் சோதனை சாவடியில் நியமித்துள்ளார். அவர்களின் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இ-பாஸ் உடனடியாக வழங்கப்பட்டு வருகிறது. 


இராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை செய்தியாளர்களிடம் கூறுகையில் 


நெல்லை மாவட்டம் கடற்கரை கிராமங்களில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் காப்பீடு செய்யப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் டயாலிஸ் சிகிட்சையை எவ்வித தடங்களும் இல்லாமல் செய்வதற்கு  நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக பேசி  எவ்வித சிரமமும் இல்லாமல் சிறுநீரக நோயாளிகள் சென்று திரும்புவதற்கு சோதனை சாவடிகளில் சிறப்பு அதிகாரிகளை நியமித்து 24 மணிநேரமும் பணியமர்த்தி நோயாளிகளை சிரமமில்லாமல் சென்று வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.