ராதாபுரம் தொகுதி தெற்கு கருங்குளத்தில் புதிய நீர்த்தேக்க திட்டம்; பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு


 

வள்ளியூரை அடுத்த தெற்கு கருங்குளத்தில் புதிய நீர்த்தேக்க திட்டம் ஒன்றை உருவாக்கவேண்டும் என்று ராதாபுரம் எம்எல்ஏ இன்பதுரை தொடர்ந்து சட்டமன்றத்தில் வலியுறுத்தி வந்தார்

 

கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் பொதுப் பணித்துறை மானிய கோரிக்கை அறிவிப்புகளின் போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வள்ளியூரை அடுத்த தெற்கு கருங்குளத்தில் புதிய நீர்த்தேக்க திட்டம் ஒன்றை தமிழக அரசு செயல்படுத்தும் என அறிவித்திருந்தார்.

 

தெற்கு கருங்குளம் கிராமத்தின் மேற்குப் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலை  பகுதியிலிருந்து மழைக்காலங்களில் வரும் வெள்ள நீர் அப் பகுதியில் தேங்கி  இயற்கையாகவே அங்கு ஒரு நீர்த்தேக்கம்  அமைந்துள்ளது. அந்த நீர்த்தேக்கத்தை விரிவுபடுத்தி அங்கு புதிய அணைக்கட்டு ஒன்றை உருவாக்கி அதன் மூலம் ராதாபுரம் தொகுதியின் தெற்கு பகுதியிலுள்ள பழவூர், செட்டிகுளம், லெப்பைகுடியிருப்பு ஆவரைகுளம்,  வடக்கன்குளம்,கருங்குளம், சிதம்பரபுரம் − யாக்கோபுரம், காவல்கிணறு உள்ளிட்ட 15 ஊராட்சிகளில் தற்போது நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை முழுமையாக தீர்க்கமுடியும்.

 

 ஏற்கனவே தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள இந்த கிராமங்களுக்கு இதுவரை தாமிரபரணி தண்ணீர் சரியாக வந்து சேருவதில்லை. இந்தப் பகுதியில் உள்ள குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் இந்த நீர்தேக்க திட்டம் மூலம் தேக்கப்படும் நீரை கொண்டு நிரந்தர தீர்வு காண முடியும்.

 

  நேற்று பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பத்மா தலைமையிலான அதிகாரிகள் தெற்கு கருங்குளத்தில் அமைய உள்ள புதிய நீர்தேக்க திட்ட பகுதியில் இன்று ஆரம்பகட்ட ஆய்வினை மேற்கொண்டனர்.

 

இந்த ஆய்வின்போது ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை, அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் வள்ளியூர் அழகானந்தம், ராதாபுரம் அந்தோணி அமலராஜா, நாங்குநேரி− ராதாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் முருகேசன் மற்றும் வருவாய்த்துறையினர் உட்பட அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் உடன் இருந்தனர்.

 

 இந்த ஆய்வினை தொடர்ந்து அடுத்தவாரம் மண்வளம் நீரின் அளவு குறித்த விரிவான ஆய்வினை பொதுப்பணித்துறை உயரதிகாரிகள் மேற்கொள்ள இருக்கின்றனர்.

Previous Post Next Post