நோய்த்தடுப்பு பணிகளில் துரிதம்... ஊரடங்கில் கடுமை.. கொரோனா இல்லாத மாவட்டமானது தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 27 பேரில், மூதாட்டி ஒருவர் மட்டும் உயிரிழந்த நிலையில் மீதமுள்ள 26 பேரும் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், கொரோனா இல்லாத மாவட்டமாகிறது தூத்துக்குடி.


சீனாவில் தொடங்கி உலகம் முழுக்க பரவிய கொரோனா வைரஸ் கடந்த மார்ச் 6-ம் தேதி, தமிழகத்திலும் பரவியது. வெளிநாடு சென்று திரும்பிய  45 வயதான காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவருக்கு முதலில் பரவியதைத் தொடர்ந்து,  தமிழகத்தில் மேலும் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக முதல்வர் பழனிச்சாமி அறிவுறுத்தியிருந்தார்.அதனடிப்படையில்  தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் கடந்த மார்ச் 17ல் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில் மக்கள் அதிகம் கூடும் பொதுஇடங்களான ரயில் நிலையம், பஸ்கள், மினிபஸ், ஆட்டோ, ஷேர் ஆட்டோ உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் ஒவ்வொரு நாளும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும். பொது இடங்களை 100 சதவீதம் சுத்தமாக வைக்க வேண்டும், என முதல் கட்ட நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரால் உத்தரவிடப்பட்டது.பொதுமக்கள் பொது இடங்களுக்கு அதிகளவில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும், பெரும்பாலும் விழாக்கள்,  சினிமா தியேட்டர்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியரால் அறிவுறுத்தப்பட்டது. மேலும், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஏற்கனவே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு தனிவார்டு அமைக்கப்பட்டு, அதில் 40 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.சிகிச்சைக்கான அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு , கொரோனாவை எதிர்கொள்ள ஆயத்தமாகியது தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம். அதே வேளையில், வெளிநாடுகளுக்கு சென்று திரும்பிய தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 48 பேர் தொடர்ந்து, வீடுகளில் வைத்து கண்காணிக்கப்பட்டனர். அத்துடன், அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலையும் கண்காணிக்கப்பட்டது.


1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை விடுமுறை அளிக்கப்பட்டு,  தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சி, பொதுத்துறை அலுவலகங்களில் தினமும் காலை நேரங்களில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குள் நுழையும் ஒவ்வொரு வாசலிலும் கைகழுவுவதற்கான இடம் ஒதுக்கப்பட்டு, மருத்துவமனை உள்ளே செல்பவரும், வெளியில் வருபவரும் கைகளை கழுவிவிட்டு தான் செல்ல வேண்டும், என கண்டிப்பு காட்டப்பட்டது, 


ஆரம்ப கட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பொதுமக்களிடையே கொரோனா வைரஸ் பற்றி அதிபயங்கர அச்சத்தை ஏற்படுத்தினாலும்,  பொது மக்களிடையே அதிகளவில் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது என்பதுதான் உண்மை.


தூத்துக்குடி மாவட்டத்தை கொரோனா எட்டிப்பார்த்தவுடன் ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையிலான அதிகாரிகள் மின்னல் வேக தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.


செய்துங்கநல்லூரைச் சேர்ந்த ஒருவருக்கு முதலில் கொரோனா அறிகுறி தெரிந்தவுடன், உடனடியாக நெல்லை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருடன் நேரடி மற்றும் மறைமுகமக தொடர்பில் இருந்தவர்களின் விவரங்கள் ஒரே நாளில் சேகரித்து,  மருத்துவக் குழுவினரால் அவர்கள் அடையாளம் காணபட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.
மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மூன்று வேளையும் சத்தான உணவுகள் கொடுக்கப்பட்டன


அதேபோல், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 27 பேருடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தினர்.இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டதுதான் கொரோனா பரவலைத் தடுக்க மிகவும் உதவியாக இருந்தது.


அத்துடன், அவர்களது வீடுகளைச் சுற்றிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. அதேபோல கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்ட 9 பகுதிகளை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து போலீஸார் உள்நபர்களை வெளிச்செல்லாமலும், வெளி நபர்களை உள்ளே நுழைய விடாமலும் தடுத்து கண்காணித்து வந்தனர். இதற்காக, குறூவட்ட அளவில் வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அடங்கிய 41 குழுக்கள் ஏற்படுத்தி கண்காணிக்க ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.


வெளிநாடுகளில் இருந்து திரும்பி வந்தவர்கள் சென்று திரும்பியவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என மாவட்டம் முழுவதும் சுமார் 3,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு தமிழகத்திலேயே முதல்முறையாக நடமாடும் ரத்தபரிசோதனை மையம் ஏற்படுத்தி ரத்தமாதிரிகளை சேகரித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


வீட்டை விட்டு வெளியேறுபவர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக பொதுமக்களின் ஒத்துழைப்பும் இருந்ததால், தூத்துக்குடியில் கொரோனா பரவலை தடுக்க முடிந்தது”.


பொது மக்கள் நடமாட்டத்தை தவிர்க்க தூத்துக்குடி மாவட்ட காவல் துறை எடுத்த நடவடிக்கைகள் கொரோனா ஒழிப்பிற்க்கு பெரிதும் கை கொடுத்தன. இரவும் பகலும் சாலை ஒரங்களிலேயே உண்டு உறங்கிய காவலர்கள் , வாகன சோதனை, தடுப்பு வேலி பணி, தடை செய்யப்பட்ட பகுதியில் பாதுகாப்புப் பணி, என கொரோனா ஒழிப்பில் பெரும் பங்கு வகித்தனர்.


தொடர்ச்சியான வாகன சோதனையில் வெட்டியாக வெளியே சுற்றிய நபர்கள் மீது நேற்றுவரை (30.04.2020) 3 ஆயிரத்து 910 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4541 பேர் கைது செய்யப்பட்டனர்.அவர்கள் பயன்படுத்திய 2158 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இப்படியாக காவல்துறையும் தன் பங்கிற்க்கு அதிரடி காட்டியது


இது குறித்து இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு :-


தூத்துக்குடி மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த கடைசி கொரோனா நோயாளியும் குணமடைந்து வீட்டுக்கு திரும்புவதன் மூலம் தூத்துக்குடி சிகப்பு மண்டலத்திருந்து, ஆரஞ்சு மண்டலாமாக மாறியுள்ளது.  இதற்கு பின்னரும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். பச்சை மண்டலாமாக மாறுவதற்கு மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 


இம்மாவட்டத்தில் கொரோனா நோய் தாக்கம் இருந்தநேரத்தில் அதை எதிர்த்து பணியாற்றிய மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், உள்ளாட்சி பணியாளர்கள், காவல்துறையினர், சமூக ஆர்வலர்கள் அனைவருக்கும் நன்றி.


வெளி மாவட்டங்களில் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருபவர்கள் முறையான அனுமதி பெற்று வரவேண்டும்‌ அவர்களுக்கு மத்திய,மாநில அரசின் சுகாதரத்துறை அறிவுறுத்தலின்படி சோதனை நடத்தப்படும். முறையான அனுமதி பெறாமல் வெளி மாநிலம், வெளிமாவட்டங்களிலிருந்து யாரவது வந்தால், அதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஏனெனில் இது மக்கள் பிரச்சனை என்பதை மனதில் வைத்துக்கொள்ளவேண்டும் என்றார்.


முதலமைச்சர் வழிகாட்டுதலில், அமைச்சர் கடம்பூர் ராஜீ, மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறை, மருத்துவத்துறை, சுகாதாரப் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம், சிறப்பாக செயல்பட்டு பொது மக்களின் ஒத்துழைப்போடு கொரோனா இல்லாத மாவட்டமாக உருவெடுத்திருக்கிறது தூத்துக்குடி, 


தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பான செயல்பாட்டால் கொரோனா இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி மாறியிருப்பதால், வரும் மே 3ஆம் தேதியுடன் ஊரடங்கு தளர்த்தப்படும், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ,சிறு தொழில் நிறுவனங்கள் வழக்கம் போல இயங்கும் என மக்களுக்கு நம்பிக்கை பிறந்திருக்கிறது, அப்பாடா என நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். இந்த சாதனையை நிகழ்த்தி காட்டிய மாவட்ட நிர்வாகத்திற்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன


அஹமத்