அரசு அதிகாரியை காட்டுக்குள் கடத்திச் சென்று நிர்வாண வீடியோ எடுத்து வழிப்பறி.! - 4 பேர் கைது, இருவருக்கு போலீஸ் வலை!

 

ராமநாதபுரம் அருகே பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் வந்த அரசு அதிகாரியிடம் லிஃப்ட் கேட்டு காட்டுக்குள் கடத்திச்சென்று, தாக்கி பணத்தை பறித்து, நிர்வாண வீடியோ எடுத்த  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் அதிகாரியாக பணிபுரியும் ஒருவர், கடந்த 14-ம் தேதி காலை இருசக்கர வாகனத்தில் பேராவூருக்கு சென்றுவிட்டு ஈ.சி.ஆர் சாலையில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த பேக்கரி அருகே நடந்து சென்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் லிஃப்ட் கேட்டுள்ளார். இதையடுத்து அவரை தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சிறிது தூரம் சென்ற நிலையில், லிஃப்ட் கேட்டு வந்த வாலிபர் கத்தியை எடுத்து அதிகாரி கழுத்தில் வைத்து தான் சொல்லும் இடத்திற்கு செல்லுமாறும், இல்லையென்றால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி புழுதிக்குளம் கண்மாய் பகுதிக்கு கடத்தி சென்றுள்ளார்.

அங்கு வந்த ஆறு பேர் கொண்ட கும்பல், அந்த அதிகாரியை கருவேலங்காட்டுப் பகுதிக்குள் இழுத்துச் சென்று துணிகளைக் களைந்து நிர்வாணமாக நிற்க வைத்து வீடியோ எடுத்ததோடு, கடுமையாக தாக்கியுள்ளனர். அதனை தொடர்ந்து அவரிடம் இருந்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துக்கொண்டு, `இதுகுறித்து வெளியில் சொன்னால் நிர்வாண வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம். கொலை கூட செய்து விடுவோம்’ எனவும் மிரட்டி அனுப்பி உள்ளனர்

படுகாயங்களுடன் அங்கிருந்து தப்பி வந்த அரசு அதிகாரி, கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி அங்கு கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை அடையாளம் கண்டறிந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட பெருங்குளத்தைச் சேர்ந்த ஜெயபாலா, நாகாச்சியை சேர்ந்த முனீஸ்குமார், முனியசாமி, கலைச்செல்வன் ஆகிய நான்கு பேரை கைது செய்துள்ளனர். மேலும் மாரீஸ்வரன், பாலேந்திரன் ஆகிய இருவரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே பல்வேறு வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு கைதான குற்றவாளிகள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பட்டப் பகலில் இருசக்கர வாகனத்தில் சென்ற அரசு அதிகாரியை வழிப்பறிக் கொள்ளையர்கள் கடத்திச் சென்று, தாக்கி பணத்தை பறித்து சென்ற சம்பவம் ராமநாதபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.Ahamed

Senior Journalist

Previous Post Next Post