ரூ.1,191 கோடியில் நான்காவது குடிநீர் திட்டத்தை தொடக்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்... இனி திருப்பூரில் 24 மணி நேரமும் குடிநீர் வருமாம்

 திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  முடிவுற்ற திட்டங்கள் திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,  பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், அரசு விழாவில் ரூ.1,191 கோடி மதிப்பீட்டில் திருப்பூர் மாநகராட்சி மக்களுக்கு நான்காவது குடிநீர்த்திட்டம் மற்றும் திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த 165 ஊரக குடியிருப்புக்கான கூட்டு குடிநீர் திட்டப்பணிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியால்  அடிக்கல் நாட்டப்பட்டு  பணிகள் நடைபெற்று வந்தது. 

இந்த திட்டத்தை தொடங்கியதும்  புதிய திட்டப்பணிகளை அடிக்கல் நாட்டி, சுமார் 5,000 பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். 


இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்மு.பெ.சாமிநாதன்,  திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் கிரியப்பவனார், நீலகிரி எம். பி., ராசா, திருப்பூர் எம். பி., சுப்பராயன், திருப்பூர் மேயர் தினேஷ்குமார், திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., க.செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  

இந்த விழாவில்   ரூ.1,191 கோடி மதிப்பீட்டில் திருப்பூர் மாநகராட்சி மக்களுக்கு புதிய குடிநீர்த்திட்டம் மற்றும் திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த 165 ஊரக குடியிருப்புக்கான கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, கால்நடை பராமரிப்பு துறை, நீர்வளத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் திட்டம் ஆகிய துறைகளின் சார்பில்  பல்வேறு திட்டப்பணிகள் திறக்கப்பட்டது. மேலும் 5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இன்று திறக்கப்பட்ட நான்காவது குடிநீர் திட்டம் மூலமாக புதிதாக 1.18 லட்சம் வீடுகள் பயனடையும். ஒவ்வொரு நாளும் 23 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளதாகவும், திருப்பூர் மாநகராட்சியில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யப்படும் எனவும் மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

8400 குடிநீர் இணைப்புகள் மட்டும் 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவதற்கு ஏற்ப புதிய இணைப்புகள் கொடுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post