அமலாக்கத்துறை எனக்கூறி ரூ.1.69 கோடியை ஆட்டையை போட்ட கும்பல்... சொகுசு கார், ஐ.போன் வாங்கி உல்லாசம்... அலேக்காக தூக்கிய திருப்பூர் போலீஸ்

திருப்பூரில் அமலாக்கத்துறை என்று கூறி நூல்வியாபாரிகளிடம்  ரூ.1 கோடியே 69 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற கும்பல், புதிதாக சொகுசு கார்,  ஐ-போன் என வாங்கி உல்லாசமாக சுற்றித்திரிந்துள்ளனர். சம்பவம் நடந்த 7 நாளில் போலீசார் அவர்களை கைது செய்ததுடன் ரூ.1.10 கோடி சொத்தினை மீட்டுள்ளனர். 

திருப்பூர் தாராபுரம் ரோடு, குமரன் நகர் 5 வது வீதியை சார்ந்த  அங்குராஜ் என்பவர் பழைய பஸ் நிலையம் அருகில் நூல் கமிஷன் கடை நடத்தி வந்தார்,  அவரது வியாபார நண்பரான  திருப்பூர் போயம்பாளையத்தை சேர்ந்த நூல் புரோக்கர் மற்றும் அவரது நண்பர்கள் திருப்பூர் பி.என்.ரோட்டை சேர்ந்த துரை என்கிற  அம்மாசை, சுந்தரபாண்டியன், உதய சங்கர்,  பெனட் , முருகவேல் ஆகியோரிடம் விஜய்கார்த்திக் என்பவர் போனில் வாட்ஸ் அப் காலில் தொடர்பு கொண்டுள்ளார். 

அப்போது ’தான் ஆந்திரா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள கம்பெனி நிர்வாக இயக்குனர்களில் ஒருவர்  என்றும், அவரது கம்பெனியின் வியாபார ரீதியாக பரிவர்த்தனை செய்த்தில் வெளிநாடுகளில் இருந்து வங்கி கணக்கில்,  கோடிக்கணக்கில் அதிக அளவில் பணம்  இருப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும், விஜயகார்த்திக்கின் நிறுவனத்தின் சார்பில் கோவை திருப்பூர் ஈரோடு போன்ற ஊர்களில் தற்போது பெரிய அளவில் கட்டுமான பணி நடைபெற்று வருவதாகவும் அதற்கு உண்டான பில்டிங் மெட்டிரியல் மற்றும் இதர செலவுகளுக்கு வேண்டி ரொக்க பணம் தேவைப்படுவதாகவும், அதற்கு ரொக்க பணம் கொடுத்தால் இரண்டு மடங்கு பணம் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் உடனடியாக செய்யப்படும் என்றும் ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்துள்ளார். 

அதை நம்பி அங்குராஜ், அம்மாசை இருவரும் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் பணம் வாங்கி ரொக்கமாக 1 கோடியே 69 லட்சத்தை சேர்த்துள்ளனர். தங்களிடம் பணம் இருப்பதை தெரிவிக்க அலுவலகத்தில் டேபிளில் பணக்கட்டுகளை அடுக்கி வைத்து, வீடியோ எடுத்து உதயசங்கர் என்பவர் மூலம் விஜய்கார்த்திக்குக்கு பணம் இருப்பதை உறுதி செய்வதற்காக வேண்டி அனுப்பி வைத்துள்ளார்கள்.

சிறிது நேரம் கழித்து அங்குராஜ் நூல் கடைக்கு ஐந்து நபர்கள் வந்து தாங்கள்  சென்னையை சேர்ந்தவர்கள் என்றும் அமலாக்கத்துறையில் இருந்து வருவதாகவும் கூறியுள்ளனர். மேலும் ‘இந்த இடத்தில் கணக்கில் இல்லாத கருப்பு பணம் கை மாறுவதாக தகவல் வந்துள்ளதாகவும் சொல்லி கடையை சோதனை செய்வதாக கூறியதுடன், அங்கு அவர்கள் வைத்திருந்த 1 கோடியே 69 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு,  கடையில் இருந்த சிசிடிவி கேமரா மற்றும் ஹார்ட் டிஸ்க் ஆகியவறறை கழற்றி எடுத்துக்கொண்டு, சென்னையில் உள்ள அமலாக்கத்துறை  அலுவலகத்திற்க்கு 2 ந்தேதி நேரில் வந்து பணத்திற்கு கணக்கு காட்டி பெற்றுக்கொள்ளுமாறு கூறி, பணத்துடன் சென்று விட்டார்கள்.

சிறிது நேரத்தில் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அங்குராஜ் தரப்பு திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் கே.வி.ஆர்., நகர் உதவி ஆணையர் கார்த்திகேயன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் கணேசன், பத்ரா, உதவி ஆய்வாளர்கள் விவேக், ரஜினிகாந்த், கார்த்தி, ராஜேந்திரபிரசாத், விஜயகுமார் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

விசாரணையில், நாமக்கல் மாவட்டம் கல்லாங்காட்டு வலசு பகுதியை சேர்ந்த விஜய் கார்த்திக் என்கிற ஜெயச்சந்திரன், சென்னை, தாம்பரம் சேலையூரை சேர்ந்த குப்தா என்கிற நரேந்திரநாத், கோவை சுண்டக்காமுத்தூரை சேர்ந்த ராஜசேகர், கோவை டாடாபாத் பகுதியை சேர்ந்த ராஜூ, சேலம் மேட்டூரை சேர்ந்த கோபிநாத், ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து போலீசார் ரூ.88.66 லட்சம் பணத்தை மீட்டுள்ளனர். 

அமலாக்கத்துறை என்று மோசடி செய்து ரூ.1 கோடியே 69 லட்சம்  பணத்தில், நரேந்திரநாத் கோவையில் ரூ.15.57 லட்சம் மதிப்பில் மகிந்திரா தார் என்கிற உயர்ரக கார் வாங்கி உள்ளார். விஜயகார்த்திக் என்கிற ஜெயச்சந்திரன் ரூ 5 லட்சம் மதிப்பில் டொயோட்டா கொரோலா ஆல்டிஸ் கார் வாங்கியுள்ளார்.  லோகநாதன் புதிதாக ஒன் பிளஸ் போன் வாங்கி உள்ளார். இவ்வாறு கொள்ளையடித்து விட்டு புது கார் மற்றும் போன் என வாங்கி ஜாலியாக சுற்றித்திரிந்து உள்ளனர். 

இவர்களிடம் இருந்து பணம் ரூ.88.66 லட்சம் உள்பட கார், போன் என ரூ.1 கோடியே 10 லட்சத்தை போலீசார் மீட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். 

சம்பவம் நடந்து ஏழு தினங்களுக்குள் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து எதிரிகளை கைது செய்து, வழக்கில் களவு போன சொத்தினை மீட்ட தனிப்படையை சேர்ந்த திருப்பூர் கே.வி.ஆர்., நகர் காவல் உதவி ஆணையர் கார்த்திகேயன் காவல் ஆய்வாளர் கணேசன், பத்ரா உதவி ஆய்வாளர்கள் விவேக், நுண்ணறிவு பிரிவு  ரஜினிகாந்த்,  கார்த்தி, ராஜேந்திரபிரசாத், விஜயகுமார் சிறப்பு உதவி ஆய்வாளர் காளிமுத்து, தலைமை காவர்கள் பிரகாஷ், சந்தோஷ்குமார், மகாராஜன் மற்றும் முதல்நிலை காவலர்கள் விஜயபாஸ்கர், அனிதராஜ், ராஜசேகர், ஜனார்த்தன்ன், சதீஸ்குமார், ராஜசேகர், விக்னேஷ்குமார சக்திவேல் ஆகியோரை காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு பாராட்டி உள்ளார்.

Previous Post Next Post