கே.எம்.சி.ஹெச் சூலூர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் புதிய அதிநவீன மருத்துவ வசதிகள் அறிமுகம் அமைச்சர் மா. சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்

கே.எம்.சி.ஹெச் சூலூர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் புதிய அதிநவீன மருத்துவ வசதிகள் அறிமுகம் அமைச்சர் மா. சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்

கோவையின் முன்னணி பல்துறை மருத்துவமனையான கேஎம்சிஹெச் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்து தரப்பு பொதுமக்களும் பயன்பெறும் வகையில் தரமான மருத்துவ சேவைகளை வழங்கிவருகிறது. மேலும் அத்தகைய மருத்துவ சேவைகளை கோவை சுற்றுவட்டாரப் பகுதி வாழ் மக்களும் ஈரோடு முதலான அண்டை மாவட்டப் பகுதி மக்களும் எளிதில் பெற்றுப் பலனடைய வேண்டும் என்பதற்காக கோவை ராம்நகர், கோவில்பாளையம், சூலூர், ஈரோடு ஆகிய ஊர்களிலும் மருத்துவ மையங்களை அமைத்துள்ளது.
இவற்றில் 2016-ம் வருடம் 100 படுக்கை வசதியுடன் துவக்கப்பட்ட கேஎம்சிஹெச் சூலூர் மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையானது பல்வேறு மருத்துவ வசதிகளுடன் மக்களுக்கு மருத்துவ சேவைகளை அளித்துவருகிறது. தற்போது அந்த பகுதியில் முதல் முறையாக மேலும் கூடுதல் வசதிகளாக அதிநவீன கேத் லேப், எம்.ஆர்.ஐ. பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றின் திறப்புவிழா பிப்ரவரி 7-ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெற்றது. அதுசமயம் மாண்புமிகு தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு கேத் லேப் எம்.ஆர்.ஐ. பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றைத் துவக்கி
வைத்தார். கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி விழாவிற்கு முன்னிலை வகித்தார். கேஎம்சிஹெச் உதவிதலைவர் டாக்டர் தவமணிதேவி பழனிசாமி மற்றும் செயல் இயக்குனர் டாக்டர் அருண்
பழனிசாமி ஆகியோரும் சூலூர் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள்,
செவிலியர்கள், ஊழியர்கள் இதில் கலந்துகொண்டனர்.
துவக்கவிழாவில் உரையாற்றிய கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி, உயர்தர மருத்துவ தொழில்நுட்பங்களை கேஎம்சிஹெச் மக்கள் நலனுக்காக தொடர்ந்து அறிமுகம் செய்துவருகிறது. அதன் ஒருபகுதியாக தற்போது துவக்கப்பட்டுள்ள இப்புதிய மருத்துவ வசதிகளினால் சூலூர் மற்றும் அதன் சுற்றுப்புற மக்கள் தங்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் ஒரே கூரையின் கீழ் பெற்றுப் பலன்பெறலாம் என்று தெரிவித்தார். சூலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முதன்முதலாக இத்தகைய மருத்துவ வசதிகளை அறிமுகம் செய்வதில் கேஎம்சிஹெச் பெருமை கொள்கிறது என்றும் அவர் கூறினார்.
Previous Post Next Post