கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் 70 வயது முதியவர் காலில் இருந்து சுமார் 20 கிலோ கட்டி அகற்றி மருத்துவர்கள் சாதனை

 


திருநெல்வேலி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள கரிசல்குளத்தை சேர்ந்த விவசாயி சா.ராமசுப்பு(70). இவரது வலது தொடையின் பின்புறத்தில் பெரிய கட்டி இருந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட ராமசுப்புவை, அவரது உறவினர்கள் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ரா.சீனிவாசன், ராமசுப்புவின் வலது காலின் பின்புறத்தில் கொழுப்பு கட்டி உருவாகி உள்ளதை கண்டுபிடித்தார். இதையடுத்து நேற்று மருத்துவமனை கண்காணிப்பாளர் அ.கமலவாசன், உறைவிட மருத்துவர் பூவேஸ்வரி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, மருத்துவர் சீனிவாசன் தலைமையில் மருத்துவர்கள் இ.அருள்குமார், எஸ்.செல்வகுமார், மயக்கவியல் மருத்துவர் எஸ்.இளங்கோ மற்றும் குழுவினர், ராமசுப்புக்கு சுமார் ஒன்றை மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டு, காலில் இருந்து கொழுப்பு கட்டி அகற்றினர்.இதுகுறித்து, மருத்துவர் ரா.சீனிவாசன் கூறும்போது, முதியவர் ராமசுப்புவை பரிசோதித்தபோது, அவரது வலது காலில் இருந்த கட்டி, கால் இயக்கத்துக்கு உதவும்  செயாடின் நரம்பு, ரத்த நாளங்களை சுற்றி இருப்பதை கண்டுபிடித்தோம். கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்ற முடிவு செய்தோம். அவரது கால் இயக்கத்துக்கு எந்தவித பாதிப்பு இல்லாத வகையில் நேற்று அறுவை சிகிச்சை செய்து கட்டி அகற்றப்பட்டது. இன்னும் 10 நாட்கள் ஓய்வுக்கு பின்னர் முதியவர் ராமசுப்பு தனது அன்றாட பணிகளில் ஈடுபடலாம். இதுபோன்ற அறுவை சிகிச்சை தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ள ரூ.1 லட்சம் வரை செலவாகும், என்றார். 


Previous Post Next Post