மும்பையில் 700 பேருடன் நட்டாற்றில் சிக்கிய ரயில்: மீட்புப்பணிக்கு நீச்சல் தெரிந்தவர்களை தேடும் அரசு 

மும்பையில் கனமழையால் ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மகாலட்சுமி எக்ஸ்பிரஸில் 700 பயணிகள் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.தென்மேற்கு பருவமழை காரணமாக  மகாராஷ்டிர மாநிலமே வெள்ளக் காடாக காட்சி அளித்தது. இந்த நிலையில் சில நாட்கள் ஓய்வு எடுத்த மழை தற்போது மீண்டும் அடித்துக்கொட்ட தொடங்கியுள்ளது. நேற்று மாலை முதல் மும்பையில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. விமானங்கள் சில ரத்து செய்யப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ராய்காட் பகுதிக்கு ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது.இந்த நிலையில் இன்றைய தினம் ராய்காட், ரத்னகிரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளதால் மக்கள் வீட்டைவிட்டு வெளியேறாமல் முடங்கி கிடக்கின்றனர். 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.அந்தேரி, தானே உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது. கனமழையால் சாலைகள் மற்றும் தண்டவாளங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது. இந்நிலையில், மும்பை நகரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என வானிலை மையம் அறிவித்துள்ளது.சயான், செம்பூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் சாலைகள் மற்றும் தண்டவாளங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. கனமழையால் சில விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மும்பையில் 150 முதல் 180 மில்லி மீட்டர் வரை மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் இன்று மும்பையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில் பாத்லாபூரிலிருந்து வாங்கானி செல்லும் மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயில் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும் ரயிலில் இருந்து கையால் துழவும் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் ரயிலை விட்டு வெளியேற முடியாமல் 700 பயணிகள் தவித்து வருகின்றனர்.தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். பிஸ்கெட்டுகள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை பயணிகளுக்கு அளித்துள்ளனர். இதையடுத்து 700 பயணிகளையும் பத்திரமாக மீட்பதற்கான நடவடிக்கைகளில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.ரெயில் பயணிகளை மீட்க தேசிய பேரிடர் மீட்பு மற்றும் ஆர்.பி.எப்., படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும், கடற்படை ஹெலிகாப்டர்களும் அங்கு விரைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தண்ணீரில் மீட்பு பணிகள் செய்ய வேண்டி இருப்பதால், நீச்சல் தெரிந்தவர்களை மட்டும் மீட்பு பணிக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டு அதன்படி பணிகள் நடந்து வருகிறது. பயணிகள் யாரும் தண்ணீரில் இறங்க வேண்டாம். மீட்பு படையினர் வந்து காப்பாற்றும் வரையில் ரயிலில் காத்திருக்கும் படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 100 பேரை படங்கள் மூலம் மீட்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சியவர்களை மீட்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.