விவசாயத்திற்கு மாற்றாக மீன் வளர்க்கும் தொழில் : தூத்துக்குடி கலெக்டர் அழைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது பணித்துறை மற்றும் ஊராட்சியில் உள்ள 885 குளங்களில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களின் கீழ் விவசாயத்திற்கு மாற்றாக மீன் வளர்க்கும் தொழிலை மேற்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சி தலைவர் சந்தீப் நந்துரி கூறியுள்ளார்.


நாட்டில் நாள் தோறும் 12 புள்ளி 3 மில்லியன் டன் மீன்கள் உற்பத்தி செய்யப்பட்டாலும் அவைகளில் பெரும்பாலனவை மீன்வளர்ப்பு மூலமாகவே மேற்கொள்ளபடுகின்றன. நாட்டில் 80 சதவீதம் மீன்கள் நன்னீர் வளர்ப்பு மூலம் மேற்கொள்ளபடுகின்றன.நன்னீர் மீன் வளர்ப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய மீன் வளர்ப்போர் தினம் இன்று கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்நாட்டு மீன் வளர்ப்பில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகளை வழங்கினார். உள் நாட்டு மீன் உற்பத்தியை ஊக்கு விக்கும் வகையில் அவர்களுக்கு நடத்தப்படும் இரண்டு நாள் பயிற்சியை தொடங்கி வைத்தார்.


தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேசுகையில், இந்திய கெண்டை மீன்களின் தூண்டும் முறை இனப்பெருக்க தொழில்நுட்பத்தை கண்டறிந்த விஞ்ஞானிகளான பேராசிரியர்கள் ஹிரா லால் செளத்ரி மற்றும் அலி குன்கி ஆகியோரின் நினைவாக தேசிய மீன் வளர்ப்போர் தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டில் மீன்களின் தேவை அதிகமாக உள்ளதால் உள்நாட்டு உற்பத்தியை பெருக்க வேண்டும். ஒவ்வொருவரும் சராசரியாக 9 கிலோ மீன்களை சாப்பிடுகிறோம்.


தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுபணித்துறை கட்டுபாட்டில் 223 குளங்களும், ஊராட்சி கட்டுப்பாட்டில் 562 குளங்களும் உள்ளன. விவசாயத்திற்கு மாற்றாக மீன் வளர்ப்பு தொழிலை மேற்கொண்டு அதிக வருமானம் ஈட்டலாம் என்றார்.மத்திய,மாநில அரசுகள் இதற்காக பல திட்டங்களை செயல்படுத்துகின்றன இதனை மீன்வளர்ப்பவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றார்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 60 பண்ணையாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் கலந்துகொண்டு பயனடைந்தனர். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மீன்வளத்துறை இணைஇயக்குநர் சந்திரா, மீன்வளக்கல்லூரி முதல்வர் வேலாயுதம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.