அமைதிப்படை ஸ்டைலில் முதல்வரான குமாரசாமி ஆட்சி காலி: பெங்களூருவில் 144 தடை

அரசியல் சதுரங்கம் ஆட ஆட பரபரப்புக்கு பஞ்சமில்லாத பவர்புல் விளையாட்டு. பணமும், பதவி ஆசையும் பாதாளம் வரை பாயும் களம் இது. இப்போதைக்கு அரசியல் களத்தில

 அதிரடி மாற்றங்களை உருவாக்கி தேசிய அளவில் தலைப்பு செய்தியாக உருவாகி உள்ளது கர்நாடக அரசியல்.

தனி மெஜாரிட்டி இல்லா விட்டாலும், அதிக சீட் பிடித்த பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவிய கடந்த சட்டமன்ற தேர்தலில், ஆச்சரியங்கள் தான் பரிசாக கிடைத்தது.

காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் ஆட்சியை பிடித்து அமைதிப்படை ஸ்டைலில் முதல்வராக இருந்தார் குமாரசாமி. 

இந்த நிலையில், குமாரசாமி அரியணையை அசைக்க பாஜக எடுத்த அஸ்திரங்கள் அனைத்துமே பிரம்மாஸ்திரம் என மாறி விட குமாரசாமி அரியணையை துறந்து விடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்.

ஆம், 

கர்நாடகாவில் 119 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஆட்சி செய்து வந்த முதல்-மந்திரி குமாரசாமியை எதிர்த்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 12 எம்.எல்.ஏ.க்களும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களும் பதவியை ராஜினாமா செய்தனர்.

2 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களும் குமாரசாமிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டு பாரதிய ஜனதா ஆதரவாளர்களாக மாறி உள்ளனர். மேலும் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துவிட்டு அமைதியாக உள்ளனர்.

19 எம்.எல்.ஏ.க்கள் பிரிந்து சென்று விட்டதால் குமாரசாமி மெஜாரிட்டி பலத்தை இழந்துள்ளார். இதையடுத்து கர்நாடகாவில் 107 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. புதிய ஆட்சி அமைக்க முயன்று வருகிறது.

சட்டசபையில் தனக்கு இருக்கும் மெஜாரிட்டியை நிரூபித்துக் காட்டுவேன் என்று சவால் விட்ட முதல்-மந்திரி குமாரசாமி அதற்கான தீர்மானத்தை கடந்த 18-ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்தார். அந்த தீர்மானத்தின் மீது கடந்த வியாழன், வெள்ளி மற்றும் திங்கட்கிழமை என 3 நாட்கள் எம்.எல்.ஏ.க்கள் விவாதம் நடந்தது. .

ஆனால் கர்நாடக அரசியல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட 3 வழக்குகள் மீதான தீர்ப்பு செவ்வாய்க்கிழமை வர இருப்பதால் நம்பிக்கை வாக்கெடுப்பை செவ்வாய்க்கிழமை நடத்தலாம் என்று முதல்-மந்திரி குமாரசாமி, காங்கிரஸ் தலைவர் சித்தராமையா ஆகியோர் வலியுறுத்தினார்கள். முதலில் இதை சபாநாயகர் ரமேஷ்குமார் ஏற்க மறுத்தார். தனக்கு ஏதாவது நெருக்கடி கொடுத்தால் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என்றும் கூறினார்.

இதைத் தொடர்ந்து சட்டசபை மீண்டும் கூடி விவாதம் நடந்தது. நேற்றிரவு 12 மணி வரை விவாதம் நடந்தது. இன்றும் விவாதம் நடைபெற்றது. 

காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை விவாதம் நடைபெற்றது.

அதன்பின்னர், முதல்-மந்திரி குமாரசாமி விவாதத்துக்கு பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், கர்நாடகாவில் உள்ள 6 கோடி மக்களிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். தவறுகளை சரிசெய்யும் நேரம் இது. நான் முதல்வராக காரணமாக இருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்றி என உருக்கமாக பேசினார்.

இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. குரல் வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு 99 வாக்குகள் கிடைத்தன. அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 105 வாக்குகள் பதிவாகின. இதனால் அவரது ஆட்சி கவிழ்ந்தது

இன்று மாலை 7.25 மணியளவில் நடந்த வாக்கெடுப்பு குமாரசாமி க்கு ஏழரையாக முடிந்துள்ளது.

பதவியேற்று ஓரிரு நாட்களில் ராஜினாமா செய்த எடியூரப்பா மீண்டும் முதல்வராக போகிறார். இப்போதைக்கு கர்நாடக மக்களுக்கு 48 மணி நேர 144 தடை தான் சிறப்பு பரிசு...

Previous Post Next Post