தென்காசி, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள்

புதிய மாவட்டங்களான தென்காசி மற்றும் செங்கல்பட்டுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு.


தமிழக சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் 18-ம் தேதி அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 1966-ம் ஆண்டில் இருந்து மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட வரலாற்றை பட்டியலிட்டார்.


இதே போன்று தமிழகத்தில் மேலும் இரு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக கூறிய அவர், திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படும் என்றார்.


இதே போன்று காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார். தென்காசி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் விரைவில் தனி அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.


இந்நிலையில்,  செங்கல்பட்டுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி அருண் சுந்தர் தயாளனும், தென்காசிக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜான் லூயிசும் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.