ரிசர்வ் வங்கியின் பங்கு தொகையை தான் காங்கிரஸ் வாங்கியது- தமிழிசைக்கு கே.எஸ்.அழகிரி பதில்


ரிசர்வ் வங்கியின் பங்கு தொகையை தான் காங்கிரஸ் வாங்கியது முதன்முறையாக உபரி நிதியை பா.ஜ.க. தான் வாங்கி உள்ளது தமிழிசைக்கு கே.எஸ்.அழகிரி பதில்

 

சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-  சிதம்பரம் வழக்கில் சி.பி.ஐ. வக்கீல் சிதம்பரம் அதிபுத்திசாலி. அவரை விசாரிக்க காலம் தேவை. அதிகமான கோப்புகளை பார்க்க வேண்டி உள்ளது என்று கூறியுள்ளார். இதை கேட்கும் போது சிறப்பாக இருந்தது. சிதம்பரத்தை அதிபுத்திசாலி என்று கூறும் இவர்கள் தங்களை அதிபுத்திசாலியாக்கி கொண்டு கைது செய்திருந்தால் நன்றாக இருக்கும். ஒரு தலைவரை அதிபுத்திசாலி என்று கிண்டல் செய்வது நியாயமா. புத்திசாலித்தனமாக இல்லாமல் ஏன் அவரை கைது செய்தீர்கள். புத்திசாலித்தனத்தை தயாரித்து அல்லவா கைது செய்திருக்க வேண்டும். இதற்கு சி.பி.ஐ. பதில் சொல்ல வேண்டும். பணவீக்கத்திற்கு காங்கிரஸ் தான் காரணம் என்று நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளார். பொருளாதாரத்தில் பணவீக்கம் ஒரு அசைவு. இந்தியாவின் வளர்ச்சியை 9 சதவீதம் கொண்டு சென்றது காங்கிரஸ். ஆசியாவில் சீனாவை அடுத்த இந்தியா வளர்ந்துள்ளதற்கு காரணம் காங்கிரஸ் தான். இந்த 6 ஆண்டுகளில் பாரதீய ஜனதா சீரழித்து உள்ளது. நிர்மலா சீத்தாராமன் தன்னை திருத்தி கொள்ள வேண்டும். முதலமைச்சர் வெளிநாட்டிற்கு சென்றதை வாழ்த்துகிறோம். பணத்துடன் வந்தால் சரி தான். நிறைய மூலதனத்துடன் வர வேண்டும். ஏற்கனவே தமிழகத்தில் 2 முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி எவ்வளவு பணம் கிடைத்தது. எவ்வளவு தொழிற்சாலைகள் வந்தது. தொழிற்சாலைகள் எங்கு தொடங்கப்பட்டன என்பதை பற்றி வெள்ளை அறிக்கை தந்தால் நன்றாக இருக்கும். தமிழகத்தில் உள்ள பிரபல நிறுவனங்கள் தங்களுடைய 2வது நிறுவனத்தை தமிழகத்தில் தொடங்கவில்லை. ஆந்திராவில் நிறுவனங்களை அமைத்து உள்ளனர். 2வது தொழிற்சாலைகளை தமிழகத்தில் தொடங்க வைத்திருந்தால் அதிகமான முதலீடுகள் கிடைத்திருக்கும். வேலை வாய்ப்புகளும் வந்திருக்கும். கையில் இருப்பதை விட்டுவிட்டு பறக்க ஆசைப்  படுவார்கள் என்று கிராமத்தில் பழமொழி சொல்வார்கள். உள்நாட்டில் மூலதனத்தை அதிகரித்து தொழில்களை கொண்டு வந்திருக்கலாம். வெளிநாட்டில் இருந்து எவ்வளவு கொண்டு வருகிறார் என்பதை பார்ப்போம். எடப்பாடி பழனிச்சாமி தான் முதலமைச்சர் பொறுப்பில் இருப்பவர். ஸ்டாலின் முதலமைச்சர் அல்ல. முதலமைச்சர் வெளியூர் செல்வதை பற்றி பதில் சொல்ல வேண்டும். அதுதான் இயல்பு. ரிசர்வ் வங்கி அரசுக்கு தர வேண்டிய பங்கு தொகையை தான் வாங்கி உள்ளனர். ஆனால் இதுவரை உபரி நிதியை காங்கிரஸ் கட்சி வாங்கியது கிடையாது. பா.ஜ.க. தான் முதன் முறையாக உபரி நிதியை வாங்கி உள்ளது. பஞ்சம் அல்லது யுத்தம் வந்தால் தான் உபரி நிதி வாங்க வேண்டும். அன்றாட செலவுக்கு உபரி நிதியை வாங்க கூடாது. அன்றாட அரசாங்கத்தின் செல்வுக்காக உபரி நிதியை பா.ஜ.க. வாங்கி உள்ளது. இது பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிக்க கூடியது. இது பொருளாதாரத்தை சமநிலையில் வைக்காது. இதை பா.ஜ.க. தவறாக பயன்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.