கோவில்பட்டியில் பிளாஸ்டிக் இல்லா தீபாவளி கொண்டாட குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள் உறுதி ஏற்பு

கோவில்பட்டியில் பிளாஸ்டிக் இல்லா தீபாவளி கொண்டாட குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள் உறுதி ஏற்புதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி, கோவில்பட்டி ரோட்டரி  சங்கம்,கோவில்பட்டி குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் கோவில்பட்டி நகராட்சி கூட்டரங்கில் வைத்து தூய்மையே சேவை இயக்க விழா நடைப் பெற்றது. சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் உரையாற்றிய நூற்றாண்டு தினமான செப்டம்பர் 11 முதல் தீபாவளி தினம் அக்டோபர் 27 வரை தூய்மையே சேவை இயக்கம் மூலம் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்பணர்வு நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.கோவில்பட்டி நகராட்சியில் நடந்த விழாவில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள் 200 க்கும் மேற்பட்டோர் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், குறைத்தல், மறுசுழற்சி மற்றும் மறு பயன்பாடு என்ற கோட்பாட்டின் திட, திரவ கழிவு மேலாண்மை திட்டத்தினை பாதுகாப்பான முறையில் செயல்படுத்தவும், முழு சுகாதார கோவில்பட்டி முன்னோடி தூத்துக்குடி மாவட்டமாக மாற்றிடவும், பிளாஸ்டிக் இல்லா தீபாவளியை கொண்டாடவும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி நகராட்சி ஆணையாளர் பொறுப்பு கோவிந்தராஜன் தலைமை வகித்தார். கோவில்பட்டி ரோட்டரி சங்க செயலளார் முத்துமுருகன், நகராட்சி சுகாதார அலுவலர் இளங்கோ, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சண்முகசுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் சுரேஷ் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் திருப்பதி, சுரேஷ்குமார் ரோட்டரி சங்க உறுப்பினர் நடராஜன், அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சுகாதார ஆய்வாளர் வள்ளிராஜ் நன்றி கூறினார்.