பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மினி மாரத்தான்

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மினி மாரத்தான் - ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.



தூத்துக்குடி மாவட்டத்தில் போஷன் அபியான் ஊட்டச்சத்து மாத விழாவையொட்டி சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மினி மாரத்தான் ஓட்டம், தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி வளாகத்தில் இன்று  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, கலந்து கொண்டு, மினி மாரத்தான் ஓட்டம் போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் துணைவியார் அத்தியாஷா நந்தூரி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) கீதாராணி உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர். மினி மாரத்தான் போட்டியானது வ.உ.சி கல்லூரி வளாகத்தில் துவங்கி, தருவை விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது. இதில் 300க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி செய்தி யாளர்களிடம் தெரிவித்ததாவது:-



போஷன் அபியான் திட்டம் நமது மாவட்டத்தில், செப்டம்பர் 1 முதல் 30ம் தேதி வரை குழந்தைகள் மற்றும் கர்ப்பினி பெண்களுக்கு ஊட்டசத்து உணவு பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. கர்ப்பினி பெண்கள், குழந்தைகள் 1000ம் நாட்களுக்கு என்னென்ன சத்தான உணவுகள் உட்கொள்ள வேண்டும் என்பதையும், குழந்தைகளின் வளர்ச்சிக்கு சத்தான உணவு பொருட்கள் வழங்குவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும்,  வயிற்றுப் போக்கு, இரத்த சோகை ஆகியவற்றிலிருந்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் குழந்தைகள் மற்றும் கர்ப்பினி தாய்மார்களுக்காக வழங்கப்படும் உணவு பொருட்கள் குறித்தும் அதிக சத்து நிறைந்த காய்கறிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பாதுகாப்பான குடிநீர் வழங்குவது குறித்தும், வீட்டில் உள்ள கழிப்பறையை பயன்படுத்துவது குறித்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.


தேசிய ஊட்டசத்து மாதத்தின் ஒவ்வொரு வாரத்திலும் பள்ளி மாணவ, மாணவியர்களிடையே போஷன் அபியான் திட்டம் (சத்தான உணவுப் பொருட்கள்) குறித்து பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களைக் கொண்டு ரங்கோலி கோலங்கள், கலை நிகழ்ச்சிகளை நடத்தி பொது மக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அங்கன்வாடி மையத்திற்கு வருகைத்தரும் குழந்தைகள் வயதிற்கேற்ப எடை, மற்றும் உயரம் சரியாக உள்ளதா என்பதை ஆராய்ந்து தேவைப் படும் பட்சத்தில் அவர்களுக்கு சத்தான உணவுப் பொருட்கள், ஊட்டசத்து மாவு வழங்கப்படுகிறது. இது போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நமது மாவட்டத்தில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, கர்ப்பினி பெண்கள் பிறந்த குழந்தை கொண்ட தாய்மார்கள் ஊட்டசத்து உணவு பொருட்களை நன்றாக உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ வேண்டும் என  தெரிவித்தார்.  இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) வீரராகவன், மாவட்ட விளையாட்டு அலுவலர் பேட்ரிக், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் முத்துலெட்சுமி,  வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா மற்றும் அலுவலர்கள்,  பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Previous Post Next Post