1 கோடிக்கு புத்தக விற்பனை  -தூத்துக்குடி புத்தகத் திருவிழா நிறைவுநாள் விழாவில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்

"ரூபாய் 1 கோடிக்கு புத்தக விற்பனை " - தூத்துக்குடி புத்தகத் திருவிழா நிறைவுநாள் விழாவில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.தூத்துக்குடி புதிய பேரூந்து நிலைய மைதானத்தில், அக்டோபர் 05 முதல் 13 வரை புத்தகத்திருவிழா கண்காட்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் நேஷனல் புக் டிரஸ்ட் புதுடில்லி இணைந்து சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. புத்தகத்திருவிழா கண்காட்சியின் நிறைவுநாள் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள் மேற்கு வங்க கூடுதல் முதன்மை செயலாளர் பாலசந்திரன், கலந்துகொண்டு மனிதநேயம், தன்னம்பிக்கை, தமிழரின் பண்பாடுகள் மற்றும் கலாசாரம் குறித்து சிறப்புரையாற்றினார்.


நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்; பேசியதாவது: தூத்துக்குடி புதிய பேரூந்து நிலைய மைதானத்தில் அக்டோபர் 05 முதல் 13 வரை நடைபெறும் புத்தகத்திருவிழா கண்காட்சியினை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்; அவர்கள் திறந்து வைத்தார். இந்த புத்தகத் திருவிழாவில், பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் பயன்பெறுகின்ற வகையில் 100க்கும் மேற்பட்ட புத்தக பதிப்பகத்தினர் அரங்குகள் அமைக்கப்பட்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கு தேவையான கதை புத்தகங்கள் முதல் போட்டி தேர்வர்களுக்கான பொது அறிவு புத்தகங்கள் வரை அனைத்து வகையான புத்தகங்களும் இடம்பெற்றுள்ளன. மேலும், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சுகாதாரத்துறை, மகளிர் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. புத்தக திருவிழா நடத்துவது தொடர்பாக 2 மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சித்தலைவர், மாநகராட்சி ஆணையர், சார் ஆட்சியர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இன்று புத்தக திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. புத்தக திருவிழாவில் ஒவ்வொரு நாளும் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் அதிக அளவில் வருகை தந்து புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்.புத்தக திருவிழாவில் இதுவரை 75,000 பேர் பார்வையிட்டுள்ளனர். நேற்று மட்டும் 8,032 புத்தகங்கள் ரூ.7.34 லட்சம் மதிப்பில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை ரூ.85 லட்சம் மதிப்பிற்கு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் 221 ஊராட்சிகளுக்கு தலா ரூ.13,314 மதிப்பிலான 99 புத்தகங்கள் என மொத்தம் ரூ.29.29 லட்சம் மதிப்பில் 25 சதவீதம் தள்ளுபடி விலையில் புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான புத்தகங்களும், மாநகராட்சி ஐ.ஏ.எஸ். அகாடமிக்கு ரூ.10,000 மதிப்பிலான புத்தகங்களும் வாங்கப்பட்டுள்ளன. மேலும், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் அவர்கள், துறைமுக பொறுப்பு கழகத்தின் சமூக பொறுப்பு நிதியில் இருந்து 100 பள்ளிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.5 லட்சம் மதிப்பில் புத்தகங்கள் வாங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்கள். எனவே இந்த புத்தக திருவிழாவில் புத்தகங்கள் விற்பனை ரூ.1 கோடி மதிப்புக்கு மேல் விற்பனையாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. புத்தகங்கள் தினமும் வாசிப்பதன் மூலம் அறிவை வளர்த்துக்கொள்ள முடியும் என்று டாக்டர் அம்பேத்கர் அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே பள்ளி, மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள் தினமும் புத்தகங்கள் வாசித்து நமது அறிவை வளர்த்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். குறிப்பாக இளம் வயதினர் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். தினமும் குறைந்த பட்சம் 15 நிமிடம் முதல் 30 நிமிடங்கள் வiர் கட்டாயம் புத்தகம் வாசிக்க வேண்டும். கடந்த 20 முதல் 25 ஆண்டுகளுக்கு முன்பு அதிகமான புத்தகங்கள் வைத்திருப்பவர்கள் சமுதாயத்தில் மதிப்புமிக்கவராக கருதப்பட்டனர். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் அதிக அளவில் வருகை தந்து புத்தக திருவிழாவை பார்வையிட்டு, புத்தகங்களை வாங்கி சென்றுள்ளனர்.


பள்ளி கல்வித்துறை மூலம் மாணவ, மாணவியர்கள் புத்தக திருவிழாற்கு வருகை தருவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டதால் தினமும் 5,000 முதல் 8,000 மாணவ, மாணவியர்கள் வருகை தந்து பார்வையிட்டனர். மேலும், ஒவ்வொரு துறை சார்ந்த அலுவலர்களும் புத்தக திருவிழாவிற்கு தங்களது குடும்பத்தினருடன் வருகை தந்து சிறப்பித்தார்கள். புத்தக திருவிழாவில் புத்தகம் வாங்கி சென்றவர்கள் தொடர்ந்து அதனை வாசித்து அறிவை வளர்த்து பயன்பெற வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் புத்தக திருவிழா ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பேசினார். தொடர்ந்து புத்தக திருவிழாவை யொட்டி நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, ஓவியம் மற்றும் கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் புத்தக திருவிழா கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற 850 மாணவ, மாணவியர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ்களை வழங்கினார்கள்.


நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணு சந்திரன், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் காலோன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, முதன்மை கல்வி அலுவலர் ஞானகௌரி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் நேர்முக உதவியாளாகள் பாலசுப்பிரமணியன் (வளர்ச்சி), வீரராகவன் (சத்துணவு), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் விநாயகம், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.