கொசு ஒழிப்புப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் க. விஜயகார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு

திருப்பூர் ஊராட்சி ஒன்றியம் முதலிபாளையம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும்
கொசு ஒழிப்புப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் க. விஜயகார்த்திகேயன் நேரில்
சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 திருப்பூர் மாவட்டம், திருப்பூர் ஊராட்சி ஒன்றியம், முதலிபாளையம் ஊராட்சி பகுதிகளில்
மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு காய்ச்சலை பரப்பக்கூடிய கொசு ஒழிப்புப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் க.விஜயகார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து தெரிவிக்கையில்,


திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும்
கிராம ஊராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சலை பரப்பக்கூடிய கொசு ஒழிப்புப் பணிகள்
அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து சிறப்பான முறையில் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று டெங்கு தடுப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இத்தினத்தில், மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் அனைத்துதுறை அலுவலர்களின் ஒருங்கிணைப்புடன் நடைபெற்று வருகிறது.அதன்படி திருப்பூர் ஊராட்சி ஒன்றியத் திற்குட்பட்ட முதலிபாளையம் கிராம ஊராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒருங்கிணைந்த சுகாதாரப் பணிகளை பார்வையிட்டு சுகாதாரப் பணியாளர்கள் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொது மக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று சுகாதார விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும் எனவும் மற்றும் பொது மக்கள் குடிநீரினை சேமித்து வைக்கும் பாத்திரங்களை பாதுகாப்பாக மூடி வைக்கவும், தேங்காய் சிரட்டை, பழைய டயர்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும், அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள், கோவில்கள் ஆகிய இடங்களில் சுகாதாரப் பணியாளர்கள் தனி கவனம் செலுத்தி கொசு உற்பத்தியை தடுப்பதன் மூலம் காய்ச்சல் பரவுவதை தடுக்க இயலும். மேலும், இப்பகுதியில், கொசு ஒழிப்பு பணிகளைப்  பார்வையிட்டதுடன் பொதுவாக தற்பொழுது காய்ச்சல் சீசனாக உள்ளதால், மருத்துவர்களின் ஆலோசனைப் பெற்று மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும். மருத்துவ ஆலோசனை இல்லாமல் மருந்துகளை உட்கொள்ளகூடாது. தொடர்ந்து மூன்று நாள் காய்ச்சல் இருந்தால், இரத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும், தொடர் காய்ச்சல் உள்ளவர்களையும் தொடர்ந்து, கண்காணிக்கப் பட்டு  வருகிறது. பொதுமக்கள் உடலுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரித்திடும் வகையில் நிலவேம்பு குடிநீர் மற்றும் பழச்சாறுகளை உட்கொள்ள வேண்டும். அதே போல் சிறியவர் முதல் பெரியவர் வரை காய்ச்சிய குடி தண்ணீரை உட்கொள்ள வேண்டும். வீடுகளில் பயனற்ற பொருட்களை தேக்கி வைக்க வேண்டாம். நீர் தேக்கத் தொட்டி மற்றும்
தண்ணீர் குடங்களை அவ்வப்பொழுது சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும்.மேலும் சுகாதார பணியாளர்கள் மருந்துகள் தெளிக்க வரும் பொழுது போதிய ஒத்துழைப்பு கொடுத்து வீடு மற்றும் சுற்றுபுறங்களில் மருந்திட்டு சுகாதாரத்தை கடைபிடித்து டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை பணிகளை மேற்கொள்ளும் மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் தங்களது முழு ஒத்துழைப்பினையும் வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். தொடர்ந்து, முதலிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட அஹ்ரஹாரபுரம், சிட்கோ தொழிற்பேட்டை தொழில் நிறுவனங்கள் மற்றும் முதலிபாளையம் துணை மின்நிலையம் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப் பட்டுள்ள டெங்கு கொசு ஒழிப்பு பணியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் க.விஜயகார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வின்போது, திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா, துணை
இயக்குநர் (பொது சுகாதாரம்) ஜெயந்தி, திருப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்
கனகராஜ், திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் மகேஷ்வரன் மற்றும் அரசு அலுவலர்கள்
உட்பட பலர் கலந்து கொண்டனர்.