ஸ்டாலின் பேச்சு நாகரிகமற்றது - அமைச்சர் கடம்பூர் ராஜூ


மேடையில் அடிக்க வேண்டும், உதைக்க வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் பேசி வருவது நாகரிகமற்றது  என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்


தூத்துக்குடி தருவை மைதானத்தில் மாவட்ட நலக்குழு நிதி ரூ.52.30 லட்சம் மதிப்பில் 2 செயற்கை இழை மைதானத்தை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு இன்று திறந்து வைத்தார். மேலும், மாநில அளவிலான டேக்வான்டோ விளையாட்டு போட்டியையும் அவர் துவக்கி வைத்தார்.



தூத்துக்குடி தருவை மைதானத்தில் புதிய செயற்கை இழை டென்னிஸ் மைதானங்கள் திறப்பு விழா மற்றும் மாநில அளவிலான புதிய விளையாட்டு டேக்வான்டோ போட்டி துவக்க விழா மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தலைமையில் இன்று நடைபெற்றது. விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு, மாவட்ட ஆட்சித்தலைவரால் ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்ட நலக்குழு நிதி ரூ.52.30 லட்சம் மதிப்பிலான செயற்கை இழை மைதானத்தை திறந்து வைத்து, மாநில அளவிலான புதிய விளையாட்டு டேக்வான்டோ
போட்டியையும் துவக்கி வைத்தார்.


பின்னர் அமைச்சர் பேசுகையில்: தூத்துக்குடி தருவை மைதானத்தில் தலா ரூ.26.15 லட்சம் மதிப்பில் 2 டென்னிஸ் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. தருவை விளையாட்டு மைதானம் திருவைகுண்டம் சட்டமன்ற
உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் அமைச்சராக இருந்தபோது புரட்சித்தலைவி அம்மா அவர்களிடம் கோரிக்கை வைத்து நிறைவேற்றப்பட்ட திட்டம் ஆகும். புரட்சித்தலைவி அம்மா அவர்கள்தான் விளையாட்டு துறைக்கு ஆக்கமும், ஊக்கமும் அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்கள்.


2012ம் ஆண்டு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது நிதிநிலை அறிக்கையில் விளையாட்டு துறைக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்கள். அந்த ஆண்டு முதல் தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோவில்பட்டியில் ஹாக்கி விளையாட்டு அரங்கம் ரூ.7.50 கோடியிலும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்தான் அமைத்து கொடுத்தார்கள். அங்கு ஹாக்கி பயிற்சிக்கு தேவையான பயிற்சி கூடமும் ரூ.1.50 கோடியில் அமைத்து கொடுத்தார்கள்.


புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக்காலத்தில்தான் விளையாட்டு துறைக்கென அதிக நிதி ஒதுக்கீடு செய்து ஆக்கமும், ஊக்கமும் அளிக்கப்பட்டது. விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், பரிசுதொகையை உயர்த்தி வழங்கினார்கள். ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றவருக்கு ரூ.3 கோடி ரொக்கப்பரிசும், வெள்ளிப்பதக்கம் பெற்றவருக்கு ரூ.2 கோடி ரொக்கப்பரிசும், வெண்கலப்பதக்கம் பெற்றவருக்கு ரூ.1 கோடி ரொக்கப்பரிசும் வழங்கப்படும் என அறிவித்தார்கள். புரட்சித்தலைவி அம்மா அவர்களை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் அம்மா அவர்கள் கொண்டு வந்த திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள்.


தமிழகம் முழுவதும் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தின்கீழ் அனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதியில் மைதானங்கள் அமைக்கப்பட்டடு கபடி, கைப்பந்து, கிரிக்கெட் போட்டிகள் இளைஞர்கள் பயிற்சி பெறும் வகையில் நடத்திட உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 403 கிராம ஊராட்சிகள், 19 பேரூராட்சி பகுதியிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் கிராமப்புற இளைஞர்களுக்கு பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.


இன்று தூத்துக்குடி தருவை மைதானத்தில் மாநில அளவில் தூத்துக்குடி மாவட்டத்தில் டேக்வாண்டோ, ஸ்குவாஷ் மற்றும் கடற்கரை கைப்பந்து போட்டிகள் நடத்தப்படுகிறது.
இப்போட்டிகளில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களை சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். அவர்களுக்கு தேவையான
வசதிகளை பள்ளி கல்வித்துறை சார்பில் சிறப்பாக செய்து கொடுக்கப்பட்டுள்ளது. போட்டிகளில் பங்கேற்க உள்ள விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை தேடித்தர வேண்டும் என பேசினார்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு "தமிழக அரசுக்கு நல்லாட்சி விருது கொடுத்தவர்களை அடிக்க வேண்டும், உதைக்க வேண்டுமென மேடையில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசி வருவது நாகரிகமற்றது "தெரிவித்தார், மேலும் அவர் கூறுகையில் பாஜகவுடன் அதிமுக இணக்கமாகவே உள்ளது, என்று கூறினார் நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்பால கோபாலன்,சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முகநாதன் (திருவைகுண்டம்), சின்னப்பன் (விளாத்திக்குளம்), மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யா, மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் மோகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகௌரி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் பேட்ரிக், மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Previous Post Next Post