பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்பு விழா ஆலோசனை கூட்டம்

பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்பு விழா - தமிழக முதல்வர் 22ம் தேதி வருகை: ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்.




திருச்செந்தூரில் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்பு விழாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் வருகை விழா முன்னேற்பாடுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் தொடர்பாக ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின்  மணி மண்டபம்  திறப்பு விழாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் வருகை தரவுள்ளது தொடர்பாக விழா முன்னேற்பாடுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம் வீரபாண்டியன்பட்டிணம் ஊராட்சி பகுதியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபம் திறப்பு விழாவுக்கு 22.02.2020 அன்று நேரில் வருகை தந்து திறந்து வைக்க உள்ளார்கள். தொடர்ந்து அருகில் உள்ள ஐடிஐ வளாகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக நடத்தப்பட உள்ளது.

இவ்விழாவிற்கு பல்வேறு துறைகளின் சார்பில் திறக்கப்படவுள்ள திட்ட பணிகள், அடிக்கல் நாட்ட வேண்டிய பணிகள் மற்றும் புதிதாக அறிவிக்க வேண்டிய திட்ட பணிகள் குறித்த விவரங்களையும், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட வேண்டிய பயனாளிகளின் பட்டியலையும் 10.02.2020க்குள் தயார் செய்து வழங்க வேண்டும். விழாவை சிறப்பாக நடத்திட ஒவ்வொரு துறையினரும் தீவிரமாக பணிகளை மேற்கொள்ள வேண்டும். பயனாளிகளை அழைத்து வரவும், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்திட வேண்டும். விழா ஏற்பாடுகளையும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். விழா நடைபெறும் பகுதியில் மருத்துவக்குழு இருக்க வேண்டும்.

மேலும், ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்க வேண்டும். விழா தினத்தன்று மேடையில் பயனாளிகளை தனியாக அமர வைத்து நலத்திட்ட உதவி பெற ஏற்பாடு செய்திட வேண்டும். திறப்பு விழா விவரங்கள், அடிக்கல் நாட்டு விழா விவரங்கள், அறிவிப்பு விவரங்களை தனியாக கையேடாக தயார் செய்ய வேண்டும். விழாவுக்கு குறுகிய காலமே உள்ளதால் அனைத்து துறை பணியாளர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என பேசினார்.

கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பால கோபாலன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) பா.விஷ்ணுசந்திரன், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் காலோன், வருவாய் கோட்டாட்சியர்கள் விஜயா (கோவில்பட்டி), செல்வி.தனப்ரியா (திருச்செந்தூர்), மகளிர் திட்டம் திட்ட அலுவலர் ரேவதி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) குற்றாலிங்கம் மற்றும் அனைத்துதுறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Previous Post Next Post