ஸ்கூட்டரில் தனியாக வந்த எம்.எல்.ஏ., சு.குணசேகரன்: பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமலிருக்க அறிவுரை

திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வாக இருப்பவர் சு.குணசேகரன். இவர் மக்களை அணுகுவதில் எப்போதும் தனித்தன்மை காட்டுபவர்தற்போது கொரோனா நோய் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆலோசனை, ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.


இதில் கலெக்டர் விஜய கார்த்திகேயன், எம்.எல்.ஏ., க்கள் சு.குணசேகரன், கே.என்.விஜயகுமார், கரைப்புதூர் நடராஜன், தனியரசு, போலீஸ் எஸ். பி., திஷா மிட்டல், மாநகர ஆணையாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


இந்த கூட்டத்தில் நோய்த்தடுப்பு நட்வடிக்கைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்துக்கு வந்திருந்த திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் நோய் தடுப்பு நட்வடிக்கையின் ஒரு செயல்பாடாக சமூக இடைவெளியை பின்பற்றும் விதமாக தனியாக இருசக்கர வாகனத்தில் மாஸ்க் அணிந்து தானே ஒட்டிக்கொண்டு வந்தார்.


உதவியாளர், டிரைவர் என யாரையும் அழைத்துக் கொள்ளவில்லை.  


அரசு சொல்லி இருக்கிற சமூக இடைவெளியை முழுமையாக பின்பற்றுவதாகவும், அதனால் தான் காரில் வராமல் தான் தனியாக ஆய்வு கூட்டத்துக்கு வந்ததாகவும் கூறினார். மேலும் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்து நோய் பரவலில் இருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.