மனிதர்களை கொல்வதற்காக சீனா உருவாக்கியது தான் கொரோனா: அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு

கொரோனா வைரசை பரவவிட்டு மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்திவிட்டதாகக் கூறி 20 டிரில்லியன் டாலர் இழப்பீடு கேட்டு சீன அரசுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு.
சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித குலத்திற்கே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்க நாட்டில் இதுவரை மூன்றாயிரத்திற்கும் அதிகமானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை அந்நாட்டில் 61 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், அமெரிக்காவில் உள்ள பள்ளி, கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டு வருவதால் அந்நாட்டிற்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தங்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கும் மனித உயிர்களுக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய சீன அரசு, சீன இராணுவம் மற்றும் ஊஹான் நச்சுயிரியல் நிறுவனம் ஆகியவை மீது 'பஸ் போட்டோஸ்', 'ஃப்ரீடம் வாட்ச்' உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
அவர்கள் தங்களது மனுவில், சர்வதேச ஒப்பந்தத்தை மீறி மனிதர்களைக் கொல்வதற்காகவே கொரோனா வைரசை சீன அரசு உருவாக்கியதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், வூஹான் நகரில் உள்ள வூஹான் நச்சுயிரியல் நிறுவனத்தில் உருவாக்கப்பட்ட இந்த வைரஸ் கசிந்ததாலேயே அது அந்த நகரத்திற்குள் பரவத் தொடங்கி, தற்போது உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான உயிர்களை பறித்துக் கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், சீனாவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் 17 -ம் தேதியே கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்து விட்டாலும் அதனை வெளி உலகிற்கு தெரியப்படுத்தாமல் சீன அரசு மறைத்து விட்டதற்கான ஆதாரம் உள்ளதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரசை வெளி உலகிற்குத் தெரியப்படுத்த முயன்ற சீன மருத்துவர்கள் சிலர் கைது செய்யப்பட்டதாகவும் சிலர் மர்மமான முறையில் காணாமல் போனதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் குறித்து முதன் முதலில் உலகிற்கு தெரியப்படுத்திய மருத்துவர் லீ என்பவர் பிப்ரவரி 6ஆம் தேதி இதே நோயால் பாதிக்கப்பட்டு இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மனிதகுலத்தை அழிக்க சீன அரசால் உருவாக்கப்பட்ட இந்த கொரோனா வைரசால் தங்கள் நிறுவனங்கள் மட்டுமல்லாமல் அமெரிக்க நாட்டிற்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதால் தங்களுக்கு 20 டிரில்லியன் டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


தமிழ் அஞ்சல் செய்திகள்