என்ன செய்கிறார்கள் திருப்பூர் பொதுமக்கள்

திருப்பூர் மாநகரில் மட்டும் பனியன் தொழிலை நம்பி 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கிறார்கள். பல்வேறு மாவட்ட மக்கள் வசிக்கும் இம்மாநகரம், 144 தடை உத்தரவுக்கு வேகமாக தயாராகி வருகிறது.


திருப்பூரில் இருந்து வெளியூர் செல்லும் அனைத்து பஸ்களும் பிசியாக இருந்தன. பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக சொந்த ஊர்களுக்கு சென்றனர். ஆனால் சாலைகள் ஓரளவு வாகன நடமாட்டத்துடன் தான் இருந்தன. பெரிய அளவிலான போக்குவரத்து நெருக்கடி இல்லை. திருப்பூர் அவிநாசி சாலை, பல்லடம் சாலை, காங்கயம் சாலை, தாராபுரம் சாலை, மங்கலம் சாலை பகுதிகள் பரபரப்பின்றி இருந்தன. ஒரு சில கடைகள் திறந்து இருந்தன. இருசக்கர வாகன போக்குவரத்து குறையவில்லை.  பழக்கடைகள், காய்கறி கடைகளில் கூட்டம் இருந்தது.


பலசரக்கு கடைகளில் பொதுமக்கள் வரிசையில் நிற்பதை காண முடிந்தது. திருப்பூர் வின்சி பள்ளி சார்பில் பள்ளி  தாளாளர் ரம்யா பிரியதர்ஷினி ஆயிரம் பேருக்கு மாஸ்க் இலவசமாக விநியோகித்தார். இது போல வேறு சில சேவை அமைப்புகளும், உணவு, மாஸ்க், இலவசமாக வழங்குவதை காண முடிந்தது. சிலர் மொத்தமாக வீட்டை காலி செய்து கொண்டு, தட்டு முட்டு சாமான்களை வாகனங்களில் ஏற்றிக்கொண்டு சென்றனர். பள்ளி மாணவிகள் பரீட்சை எழுத செல்லும் காட்சிகளையும் காண முடிந்தது. 


மொத்தத்தில் திருப்பூர் ஒரு பெரும் அமைதியை எதிர்கொள்ள தயாராகிறது.