திருப்பூரில் 12 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது!

தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 12 ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.விஜயகார்த்திகேயன் வழங்கினார்.


திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில், இன்று (07.09.2020), பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ஆசிரியர் தின விழாவினையொட்டி பள்ளிகளில் சிறப்பான முறையில் பணியாற்றி தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 12 ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.விஜயகார்த்திகேயன் வழங்கினார்.


மறைந்த இந்திய நாட்டின் குடியரசுத்தலைவர் டாக்டர்.எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த தினமான செப்டம்பர் திங்கள் 5 ஆம் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாப்பட்டு வருகிறது. இந்நாளில், சிறந்த கல்வி தொண்டாற்றும் நல்லாசிரியர்களுக்கு " டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது " வழங்கி தமிழ்நாடு அரசு கௌரவித்து வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு சிறந்த முறையில் பணியாற்றிய ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 12 ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகள், வெள்ளிப்பதக்கங்கள் மற்றும் ரூ.10,000/- ரூபாய் பரிசுத்தொகைக்கான காசோலையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கி கௌரவித்து பாராட்டினார்.


இந்நிகழ்வின் போது, சட்டமன்ற உறுப்பினர்கள் கே.என்.விஜயகுமார் (திருப்பூர் வடக்கு), உ.தனியரசு (காங்கயம்), மாவட்ட வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரா.ரமேஷ், முதல்வர் (மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் திருமூர்த்தி நகர்) டாக்டர்.சங்கர், மாவட்ட கல்வி அலுவலர்கள் சிவகுமார், திரு.நரேந்திரன், பழனிச்சாமி, நாகராஜன், தேர்வுத்துறை உதவி இயக்குநர் மணிவண்ணன், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.