டாக்காவில் உள்ள பழரச தொழிற்சாலையில் தீ விபத்து; 52 பேர் பலி.!


டாக்கா-வங்கதேசத்தில் பழரச தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், 52 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.நம் அண்டை நாடான வங்கதேசத்தில் நாராயண்கன்ஜ் மாவட்டம், ரூப்கன்ஜ் நகரில், ஹஷம் புட்ஸ் என்ற பழரச தயாரிப்பு நிறுவனம் உள்ளது. ஆறு மாடி கட்டடத்தில் செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தின் தரை தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

அங்கிருந்த தொழிலாளர்கள் பீதியில் அலறி அடித்தபடி வெளியே ஓடினர். அப்போது பலமான காற்று வீசியதால், தீ, மேல் மாடிகளுக்கும் பரவியது. இதனால் தொழிற்சாலை கட்டடம் முழுதும் கரும் புகை சூழ்ந்தது. மாடிகளில் இருந்த தொழிலாளர்கள் பலர், தப்பிக்க வழி தெரியாமல் தீக்கு இரையாயினர். மேலும் பலர் உயிர் தப்ப, மாடிகளில் இருந்து குதித்தனர்.தகவல் அறிந்து, 18 வண்டிகளில் வந்த தீயணைப்பு படையினர், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இது குறித்து தீயணைப்பு துறை துணை இயக்குனர் அப்துல்லா அல் அரிபின் கூறியதாவது:தொழிற்சாலையில் ஏராளமான ரசாயனங்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் ஆகியவை இருந்ததால், தீ மளமளவென பரவியுள்ளது. இந்த விபத்தில், 52 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில், 44 பேரின் உடல்களை உறவினர்கள் அடையாளம் காண்பித்துள்ளனர். மேலும் பலரை காணவில்லை என, கூறப்படுகிறது. தீ முழுவதுமாக அணைக்கப்பட்ட பின்தான், விபத்துக்கான காரணம் தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.

Previous Post Next Post