ஆதிச்சநல்லூர் தொல்லியல் துறைக்கு சொந்தமான இடத்தில் கிரில் கேட்டுகளை திருடிய 3 பேர் கைது - 2 வேன் பறிமுதல்.!தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆதிச்சநல்லூரில் உள்ள மத்திய அரசு தொல்லியல் துறைக்கு சொந்தமான 12 கிரில் கேட்டுகள் கடந்த 16.08.2021 மற்றும் 18.08.2021 ஆகிய நாட்களில் மர்ம நபர்களால் திருடப்பட்டது. 

இது குறித்து தொல்லியல் துறையினர் கொடுத்த புகாரின் பேரில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் மேற்படி திருட்டு வழக்கை கண்டுபிடித்து சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து, திருடப்பட்ட கிரில் கேட்டுகளை விரைந்து மீட்பதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், 

ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் செய்துங்நல்லூர் உதவி ஆய்வாளர் கருத்தையா  தலைமையில் காவலர்  நயினார் உட்பட போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில் மேற்படி தனிப்படையினர் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் டாட்டா ஏஸ் வாகனத்தில் திருடப்பட்ட கிரில் கேட்டுகள் கொண்டு சென்றது தெரியவந்துள்ளது. 

ஆனால் வாகன எண்ணோ, வாகனத்தை கண்டறியக்கூடிய அடையாளங்கள் எதுவும் சிசிடிவி கேமராவில் தெரியவில்லை. இருப்பினும் டாட்டா ஏஸ் வாகனத்தில் கடத்திக் கொண்டு சென்றதை வைத்துக்கொண்டு தனிப்படையினர் தீவிர விசாரணையில் 

மகாதேவன்குளத்தைச் சேர்ந்த ராஜா மகன் 1) உதயகுமார் (31) மற்றும் திசையன்விளை அருகேயுள்ள இடையன்குடியைச் சேர்ந்த தங்கதுரை மகன் 2) சுபாஷ் (23) ஆகிய இருவரும் திருடியது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் இருவரையும் மேற்படி 

தனிப்படையினர் திருவரங்கம்பட்டியில் மடக்கிப்பிடித்து கைது செய்து விசாரணை செய்ததில் 16.08.2021 அன்று 4 கிரில் கேட்டுகளை திருடி ஒரு டாட்டா ஏஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றதையும், அதன்பிறகு 18.08.2021 அன்று மற்றொரு டாட்டா ஏஸ் வாகனத்தில் 8 கிரில் கேட்டுகளையும் திருடி ஏற்றிச் சென்றதையும், 

திருடிய கிரில் கேட்டுகளை பழைய இரும்புக்கடை வியாபாரியான இட்டாமொழி தெற்குத் தெருவைச் சேர்ந்த சேர்மதுரை மகன் 3) அருள்ராஜ் (34) என்பவரிடம் பழைய இரும்புக்கு விற்பனை செய்ததையும் ஒப்புக்கொண்டனர். 

அதன்படி மேற்படி அருள்ராஜை போலீசார் கைது செய்து விசாரணை செய்ததில் திருடப்பட்ட 12 கிரில் கேட்டுகளையும் அவர்களிடமிருந்து வாங்கி அதை உருக்கி இரும்பு ராடுகளாக மாற்றியுள்ளதாகவும் தெரிவித்தார். பின் அவரிடமிருந்து இரும்பு ராடுகளாக உருக்கி வைக்கப்பட்டிருந்த 1840 கிலோ எடையுள்ள 10 ராடுகளையும் பறிமுதல் செய்தனர்.  

மேலும் கிரில் கேட்டுகளை திருடுவதற்கு பயன்படுத்தி 2 டாட்டா ஏஸ் வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தனிப்படை போலீசார் இது சம்மந்தமாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி கிரில் கேட்டுகளை திருடிய உதயகுமார், சுபாஷ் மற்றும் அருள்ராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்து, இரும்பு ராடுகளாக உருக்கி வைக்கப்பட்டிருந்த 1840 கிடை எடையுள்ள கிரில் கேட்டுகளை மீட்டும், திருடுவதற்கு பயன்படுத்திய 2 வாகனங்களையும் பறிமுதல் செய்த உதவி ஆய்வாளர் கருத்தையா தலைமையிலான தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.