தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 68 லட்சம் பனைமரங்கள் நடப்பட்டுள்ளன - ஆட்சியர் செந்தில்ராஜ் தகவல்.!


தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம் சேதுக்குவாய்த்தான் ஆற்றங்கரை பகுதியில் தோட்டக்கலைத்துறை மூலம் 10000 பனை விதைகள் நடும் பணிகள் துவக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில் ராஜ், பனை விதைகள் நடும் பணிகளை  தொடங்கி வைத்தார். மேலும் மல்லிகை மகளிர் சுய உதவிக்குழுவினர்  பனை ஓலை மூலம் தயாரிக்கப்பட்ட கைவினைப்பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தூத்துக்குடி மாவட்டத்தின் அடையாளமாக பனைமரம் உள்ளது. தமிழகத்தில் சுமார் 5 கோடி பனைமரங்கள் இருந்தாலும் அதிகப்படியாக தூத்துக்குடி மாவட்டத்தில்தான் சுமார் 2 கோடி பனைமரங்கள் உள்ளன. 

சேதுக்குவாய்த்தான் ஊராட்சியில் தோட்டக்கலைத்துறை மற்றும் மதர் சமூக சேவை நிறுவனம் இணைந்து 10,000 பனை விதைகள் நடும் பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மதர் சமூக சேவை நிறுவனம் ஏற்பாட்டில் நமது மாவட்டத்தில் 1 கோடி பனை மரங்கள் நடவேண்டும் என இலக்கு நிர்ணயித்து இதுவரை 68 லட்சம் பனைமரங்கள் நடப்பட்டுள்ளன. 

இந்த ஆண்டு பனை மரங்களில் இருந்து நுங்கு வெட்டும் பருவம் முடிந்து பனைவிதைகள் சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்கள், கண்மாய்கள், ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலை பகுதிகளில் அதிகப்படியான பனைமரங்களை நடுவதற்கு தொடர்ந்து ஏற்பாடுகள் செய்யப்படும். 

பனை மரங்கள் மூலமாக நுங்கு, பதனீர் மற்றும் கருப்பட்டி ஆகிய உணவுப்பொருட்கள் நமக்கு கிடைக்கின்றன. மேலும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பனை ஓலைகள் மூலம் செய்யப்படும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பதற்கு பல்வேறு நிறுவனங்கள் மற்றும் நபார்டு, தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் ஆகியவை மூலம் கடன் உதவிகள் வழங்கப்படுகிறது. 

உடன்குடியில் பனை பொருட்கள் உற்பத்தியாளர்கள் அமைப்பு நிறுவுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதிகப்படியான மக்கள் வருங்காலங்களில் பனை மரங்களால் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.  

தமிழக அரசு அறிவித்துள்ளபடி, பனைமரங்களை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி தேவை என்பதால் இதற்காக வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை ஆகியவை மூலம் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சரஸ்வதி, கூடுதல் தொழில்துறை ஆலோசகர் (ஓய்வு) சண்முகநாதன், ஏரல் வட்டாட்சியர் இசக்கிராஜ், ஊரக புத்தாக்க திட்ட அலுவலர் முத்தமிழ்செல்வன், மதர் சமூக சேவை நிறுவன இயக்குநர் கென்னடி, ஒருங்கிணைப்பாளர் பானுமதி, பங்குதந்தை தாமஸ், பஞ்சாயத்து தலைவர் சுதா சீனிவாசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.  

Previous Post Next Post