பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 86வது பிறந்தநாள் விழா - கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை.!

 


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் வீரபாண்டியபட்டிணத்தில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு  தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மற்றும் சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். 

பின்னர்  தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சர்  அறிவுறுத்தலுக்கிணங்க டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்றைய தினம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. 

நம்முடைய அன்பிற்கும், மரியாதைக்கும், பாசத்திற்கும் உரிய பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களுடைய புகழ் நீடுளி வாழ வேண்டும். முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர்  மீது நீங்காத பற்றும் பாசமும் கொண்டிருக்கிற ஒருவராக திகழ்ந்தார். 

மேலும் முதலமைச்சர்  மீது நம்பிக்கை வைத்து அவருடைய திறமையை முழுமையாக போற்றக்கூடியதாக ஒருவராக திரு.பா.சிவந்தி ஆதித்தனார்  இருந்திருக்கிறார்கள். அவருடைய பங்களிப்பு பல்வேறு துறைகளின் இருந்தன, பத்திரிக்கை துறையிலும் மிக அதிக ஈடுபாட்டுடன் இருந்துள்ளார்கள். 

விளையாட்டு துறை மற்றும் பல்வேறு துறையில் இருக்கக்கூடியவர்கள் இன்று புகழ் பெற்ற சாதனையாளர்களாக உருவாவதற்கு அவருடைய அந்த நம்பிக்கை, அவருடைய தூண்டுதல், அவருடைய பேணுதல் இதுதான் காரணமாக இருந்திருக்கிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார். 

நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் கோகிலா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங், வட்டாட்சியர் முருகேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராணி, முத்துகிருஷ்ணன், மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் செல்வகுமார், உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பாலசிங்,  மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். 

Previous Post Next Post