சமூக நலத்துறை அலுவலகத்தில் 25 ஆயிரம் லஞ்சம் - பெண் அதிகாரி கைது


காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் அடுத்த குரோம்பேட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணபிரசாத் (32). தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறார். கடந்த சிலஆண்டுகளுக்கு முன் கிருஷ்ணபிரசாத்துக்கும் தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் அர்ச்சனா (28) என்பவருக்கும் திருமணம் நடந்தது. வரதட்சணை தகராறில் கணவன்  மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு குறித்து காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை சார்பில் இளநிலை உதவியாளர் பிரேமா மார்க் என்பவரிடம் பரிந்துரைக் கடிதம் கோரியுள்ளார்.

இதுதொடர்பான பரிந்துரைக் கடிதம் வழங்க கிருஷ்ணபிரசாத்திடம் 50 ஆயிரத்தை பிரேமா மார்க் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க கிருஷ்ணபிரசாத் விரும்பவில்லை.இதையடுத்து காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் புகார் செய்தார்.  தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் ஆலோசனைப்படி முதல் தவணையாக 25 ஆயிரத்தை கிருஷ்ணபிரசாத் இளநிலை உதவியாளர் பிரேமா மார்க்கிடம் கொடுத்தார்.அப்போது அங்கு லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையில் மறைந்திருந்த போலீசார் பிரேமா மார்க்கை கையும் களவுமாக பிடித்தனர். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்தனர்.

மேலும் இது சம்பந்தமாக சமூகநலத்துறை அலுவலகத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டு லஞ்ச பணத்தை பெறுவதில் யார் யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Previous Post Next Post