குடியரசு தின விழா : தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு! - பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்!

பாஜக ஆளும் கர்நாடகாவை தவிர மற்ற தென் மாநிலங்களின் ஊர்திகளுக்கு குடியரசு தின விழாவில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் 'குடியரசு தின அணிவகுப்பில், தமிழக அரசின் ஊர்தி இடம் பெறுவதற்கு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு, கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில்...

குடியரசு தின அணிவகுப்பில், தமிழக ஊர்தி பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளதை அறிந்து, மிகுந்த ஏமாற்றம் அடைந்தேன். இதற்காக, தமிழகத்தின் புகழ்பெற்ற சுதந்திர போராட்ட வீரர்களை சித்தரிக்கும் வகையில், 'சுதந்திர போராட்டத்தில் தமிழ்நாடு' என்ற கருப்பொருளை தேர்ந்தெடுத்து, தமிழக அரசு சமர்ப்பித்து இருந்தது.

ஊர்தியில் தமிழகத்தின் சுதந்திர போராட்ட வீரர்களான, வ.உ.சிதம்பரனார், பாரதியார், ராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்களின் ஓவியங்கள் இடம்பெற இருந்தன. இதற்காக, மாநிலத்தின் பிரதிநிதிகள் மூன்று முறை நிபுணர் குழு முன் ஆஜராகினர்; நான்காவது முறை, அவர்களை அழைக்கவில்லை.

தமிழகத்தின் ஊர்தியை ஒதுக்குவது, தமிழக மக்களின் உணர்வுகளையும், தேசபக்தி உணர்வுகளையும் ஆழமாக புண்படுத்தும். தமிழகத்தின் ஊர்தியை நிராகரித்தது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது, தமிழக மக்களுக்கும், மிகுந்த கவலை அளிக்கிறது. எனவே, தமிழகத்தின் சுதந்திர போராட்ட வீரர்களை காட்சிப்படுத்தும், தமிழக ஊர்தியை சேர்க்க வேண்டும். இப்பிரச்னையில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும். விடுதலை போராட்ட வரலாற்றில், தமிழகத்தின் பங்களிப்பு இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post