உக்ரைனில் இருந்து இந்தியர்களை அழைத்து வர நான்கு மத்திய அமைச்சர்களை நேரடியாக அனுப்ப முடிவு!


உக்ரைன் ரஷ்ய போரால் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களையும் பிற இந்தியர்களையும் மீட்டு வருவதற்காக, இந்திய அரசு நான்கு அமைச்சர்களை அனுப்புவதாக இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு சிறப்புத் தூதுவராக மூத்த அமைச்சர்களை அனுப்பி, இந்தியர்களை வெளியேற்றும் செயல்முறையை ஒருங்கிணைக்க இந்திய அரசு முடிவெடுத்துள்ளதாகவும் தெரியவந்திருக்கிறது.

மத்திய அமைச்சர்கள், ஜோதிராதித்ய சிந்தியா, ஹர்தீப் சிங் பூரி, கிரண் ரிஜிஜு மற்றும் ஜெனரல் விகே சிங் ஆகியோர் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு சிறப்பு தூதுவர்களாகச் சென்று, இந்தியர்களை உக்ரைனின் இருந்து வெளியேற்றும் பணியை ஒருங்கிணைப்பார்கள் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

உக்ரைன் வான்வெளி மூடப்பட்டுள்ளதால், இந்திய மாணவர்களை கீயவில் இருந்து வெளியேற்ற உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா மற்றும் ஹங்கேரியை இந்தியா பயன்படுத்துகிறது.

இந்தியர்களை வெளியேற்றும் திட்டம் குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோதி திங்கள் கிழமை காலை அவசரக் கூட்டத்தை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் இந்த நாடுகள் வழியாக இந்தியர்களை அழைத்து வருவதற்கான தூதரக தடைகளைச் சமாளிக்க, அமைச்சர்கள் விரைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளுக்குப் பயணிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

Previous Post Next Post