திருப்பூர் மேயர் யாரு...? சென்னையில் முகாமிட்டு ‘அரசியல் சதுரங்கம்’

2008-ம் ஆண்டு திருப்பூர் மாநகராட்சி உருவாக்கப்பட்டது. க.செல்வராஜ் மேயராக இருந்தார். அதைத்தொடர்ந்து வந்த 2011 தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடித்தது. திருப்பூர் மாநகரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு 2021 சட்டமன்ற தேர்தலில்  எம்.எல்.ஏ., சீட்டை பிடித்தது திமுக;  மத்திய மாவட்ட பொறுப்பாளராக இருக்கும் க.செல்வராஜ்  எம்.எல்.ஏ., ஆனார். 

தொடர்ந்து நடந்த உள்ளாட்சி தேர்தலில் திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 கவுன்சிலர் சீட்டுகளில் 37 ஐ திமுக கூட்டணி கைப்பற்றி உள்ளது. 19 கவுன்சிலர் சீட்டுகள் அதிமுக வசமாகி உள்ளது. 2 இடங்களை பா.ஜ.க.,வும், இன்னும் இரண்டு இடங்களை சுயேட்சைகளும் வென்று உள்ளனர்.

இந்த நிலையில் திருப்பூர் மேயர் சீட்டை பிடிக்க திமுக கூட்டணியில் கடும் போட்டி நிலவுகிறது. திமுகவில் வென்ற கவுன்சிலர்களில் பலரும், கூட்டணி கட்சியினரில் பலரும் மேயர், துணை மேயர், மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் என பல்வேறு பதவிகளை பிடிக்க சென்னையில் முகாமிட்டு காய் நகர்த்தி வருகிறார்கள் என திமுக வட்டாரத்தில் தகவல் கசிகிறது. 
 திருப்பூர் 41 வது வார்டில் வென்ற அக்கட்சியின் வடக்கு மாவட்ட பொறுப்பாளரான இல.பத்மநாபன் திமுகவின் தலைமையிடத்திலும், செய்தித்துறை அமைச்சராக திருப்பூர் மாவட்டத்தில் ஆதிக்கம் செலுத்தக் கூடிய அமைச்சராக இருக்கிற மு.பெ.சாமிநாதனுக்கும் நெருக்கமானவராக இருப்பதால் மேயர் போட்டியில் முதல் இடத்தில் இருக்கிறார் பத்மநாபன்.

 திருப்பூர் மத்திய மாவட்ட திமுகவில் வடக்கு மாநகர பொறுப்பாளராக இருக்கும் ந.தினேஷ்குமார் பெயர் சட்டப்பேரவை தேர்தல் நடந்த போது முதல் மேயர் பெயர் பட்டியலில் இடம்பெற்றது. அவரும் மேயர் போட்டியில் இருக்கிறார். இறுதி கட்டத்தில் சீட் வாங்கினாலும், கட்சி தலைமையிடம் நெருக்கமாக இருப்பவர் முன்னாள் எம்.எல்.ஏ., வான கோவிந்தசாமி, எனவே அவருக்கும் மேயர் சீட் கிடைக்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 

இதுவெல்லாம் தாண்டி திருப்பூர் மத்திய மாவட்ட பொறுப்பாளரான க.செல்வராஜூக்கு நெருக்கமானவரான செந்தூர் முத்து என்கிற முத்து கிருஷ்ணன் பெயரும் மேயர் போட்டியில் இருப்பதாக கூறப்படுகிறது.

கட்சியின் மாவட்ட பொறுப்பில் இருப்பதுடன், தலைமைக்கும், மாவட்ட அமைச்சருக்கும் நெருக்கமாக இருப்பதாலும், உள்ளாட்சி தேர்தலில் களத்தில் சிறப்பாக செயல்பட்டதாலும் இல.பத்மநாபன் மேயராகும் வாய்ப்பு இருப்பதாக பேச்சுகள் உலவுகிறது. 

இவர் மேயராகும் பட்சத்தில் துணை மேயர் பதவிக்கு மற்றவர்கள் போட்டி போடத் தயாராக இருப்பதாகவும், அதற்கான வேலைகளை ஆரம்பித்து உள்ளதாகவும் தெரிகிறது. இதில் துணை மேயர் பதவிக்கு முன்னாள் துணை மேயரான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கே.பி.ஜி/செந்தில்குமாரும் போட்டிக்களத்திற்கு வந்து விடுவார் எனவும் தெரிவிக்கிறார்கள். 

மேயர், துணை மேயர் பதவியை பெற முடியாது போனால், மண்டல தலைவர்களாக பதவியேற்கவும், நிலைக்குழு தலைவராக பதவி ஏற்கவும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தயாராக இருக்கிறார்கள். இவர்களுடன் கூட்டணி கட்சியினரும் இந்த பதவிகளை பிடிக்க காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. 

இதனால் கடந்த 5 ஆண்டுகளாக இல்லாமல் இருந்த உள்ளாட்சி பதவிகள் நிரம்ப போகிறது. மேயர், துணை மேயர், மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் என பலருக்கும் பதில் சொல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகி உள்ளார்கள்,  யாருக்கு என்ன பதவி என கட்சி நிர்வாகிகள் பதறுகிறார்களோ இல்லையோ,  இதுவரை ‘தனியாவர்த்தனம்” நடத்தி வந்த மாநகராட்சியின் பல்வேறு மட்ட அதிகாரிகளும். அலுவலர்களுக்கும் ‘கிலி” பிடித்து காணப்படுகின்றனராம். 
Previous Post Next Post