லேப் டெக்னிசியன் படித்து விட்டு மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது.! -மருத்துவமனைக்கு சீல்...!

திருப்பூர் மாவட்டம் அவினாசி கைகாட்டி அருகே சந்தைபேட்டை எதிரில் கே.எஸ். கிளினிக் என்ற பெயரில் இரண்டு வருடங்களாக செயல்பட்டுவருகிறது. இங்குள்ள நபர் மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதாக மருத்துவ அலுவலர்களுக்கு புகார் வந்துள்ளது. 

புகாரின் பேரில் அவிநாசி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சக்தி தங்கராஜ், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சக்திவேல், சுகாதார ஆய்வாளர்கள் ரமேஷ், பரமன் உள்ளிட்டோர், மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த போலி மருத்துவர், ஜெயக்குமார் (வயது 42) சான்றிதழ்  மற்றும் பதிவு எண் உள்ளிட்ட ஆவணங்களை தராமல் தான் ஜலந்தரில் உள்ள பல்கலையில், சித்த மருத்துவம் படித்ததாக முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

இதனால் மருத்துவ அதிகாரிகளுக்கு சந்தேகம் அதிகரித்ததால், அவரிடம் மேலும் விசாரணை நடத்தினர். அப்போது ஜெயக்குமார் (வயது 42) மருத்துவம் படிக்காமல், ஒரு வருட லேப் டெக்னிசியன் படிப்பு மட்டுமே படித்து கடந்த இரண்டாண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தெரியவந்தது. மேலும் மருத்துவமனையில் உள்ள டாக்டரின் மருந்து பரிந்துரை சீட்டில், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில், மருத்துவமனை பெயர் மட்டுமே இடம் பெற்றுள்ளது; டாக்டர் பெயர் இல்லை.

இது தொடர்பாக அவினாசி போலீசார் மற்றும் தாசில்தார் ராகவி ஆகியோருக்கு மருத்துவ அதிகாரிகள் தகவல் அளித்தனர். அவர்கள் சம்பவ இடத்தில் வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு கடந்த 2 ஆண்டுகளாக  சிகிச்சை அளித்து தெரியவந்ததையடுத்து அவரை கைது செய்த போலீசார், அனுமதியின்றி இயங்கி வந்த மருத்துவமனைக்கு அவினாசி தாசில்தார் ராகவி முன்னிலையில்  சீல் வைத்தனர்.

லேப் டெக்னிசியன் படிப்பு முடித்து விட்டு பொது மருத்துவம் பார்த்த சம்பவம் அவிநாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post