ஏழை மாணவர்கள் முன்னேற திட்டங்களை தந்தவர் எடப்பாடியார்... முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேச்சு

 பல்லடத்தில் புரட்சித்தலைவி அம்மா அரசு கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழா பேருரையாற்றி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். 

விழாவிற்கு கல்லூரி முதல்வர்  முனியன் தலைமை தாங்கினார். வணிகவியல் துறைத்தலைவர் ஜெயச்சந்திரன் வரவேற்று பேசினார். கணினி அறிவியல் துறை தலைவர் கார்த்திகேயன் விளையாட்டுத்துறை ஆண்டறிக்கை வாசித்தார்.

  இந்த விழாவில்  கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ., பேசும்போது கூறியதாவது:
கல்விதான் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் என்பதால் தான் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 10 ஆண்டுகளாக முதல்வர் பொறுப்பில் கல்விக்காக ஏராளமான திட்டங்களை வகுத்தார். தனியார் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் வளர்ச்சி பெறுவதை போல அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் முன்னேற வேண்டும் என்பதற்காக பல திட்டங்களை வகுத்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். இதே வழியில் மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் நல்ல திட்டங்களை கல்விக்காக செயல்படுத்தினார்.
இந்த கல்லூரி 1400 மாணவர்கள் பயிலும் வண்ணம் உயரக் காரணம் அம்மா அவர்களின் அரசு தான். கடந்த காலத்தில் அம்மா அவர்களின் திட்டமாக தொகுதிக்கு ஒரு அரசு கல்லூரி என்ற அடிப்படையில் பல்லடத்தில் புரட்சித்தலைவி அம்மா அரசுக்கல்லூரியை எடப்பாடியார் அமைத்தார். திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, காங்கயத்திலும் அரசு கல்லூரிகள் அமைத்தது எடப்பாடியாரின் சாதனை.
இப்படி கல்வித்திறனால் ஏழை, எளிய மாணவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திட கல்லூரிகளை மட்டுமில்லாமல் கல்வித்திட்டங்கள் பலவற்றையும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் வந்த எடப்பாடியாரின் அரசு செய்து தந்திருக்கிறது. நான் தாளாளராக இருந்த திருப்பூர் குமரன் கல்லூரிக்கு ஏராளமான பணிகளை செய்து தந்திருக்கிறேன். அது போல புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பெயரை தாங்கி இருக்கக் கூடிய இந்த கல்லூரிக்கு தேவையானவற்றை நிச்சயம் செய்து தருவேன். கல்லூரி முதல்வரின் கோரிக்கைக்கு ஏற்ப இந்த கல்லூரிக்கு ஆடிட்டோரியம் அமைத்து தர நடவடிக்கை எடுப்பேன். 7 பாடப்பிரிவுகள் கூடுதலாக தொடங்க நடவடிக்கை எடுப்பேன். மாணவர்கள் சிறப்பாக படித்து பலன் பெற வாழ்த்துகிறேன். இவ்வாறு எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ., பேசினார். 

தொடர்ந்து படிப்பு, விளையாட்டு, கலைத்துறையில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 

இந்த விழாவில், தமிழ்த்துறை தலைவர் பாலமுருகன், சி.ஆர்.கார்மெண்ட்ஸ் முருகேசன், தாமரைசெல்வன், பாரதிய மாணவர் பேரவை அண்ணாதுரை, ஏஞ்சல் சிவகுமார், ஒன்றிய செயலாளர் சித்துராஜ் உள்பட திரளானவர்கள் பங்கேற்றனர்.

 முடிவில் மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
Previous Post Next Post