தூத்துக்குடி ; வெளிநாட்டில் செவிலியர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 10,65,000/- பணம் மோசடி செய்தவர் கைது.


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரபாண்டியபட்டினம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் முகநூல் (Facebook) பக்கத்தில் அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியர் வேலை வாய்ப்பு உள்ளதாக வந்த விளம்பரத்தை பார்த்து 

அவர்களை தொடர்பு கொண்டதில் அவர்கள் செவிலியர் வேலைக்கான பதிவு கட்டணம், விசா செயல்பாடு மற்றும் கஸ்டம்ஸ் கிளியரன்ஸ் என பல்வேறு காரணங்களை கூறி மேற்படி பெண்ணிடம் ரூபாய் 10,65,000/- மோசடி செய்து ஏமாற்றியுள்ளதாக பாதிக்கபட்ட பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் அளித்துள்ளார்.

மேற்படி புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்  தூத்துக்குடி சைபர் குற்றப் பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன்  மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையிலான தனிப்படை அமைத்து வெளிநாட்டில் செவிலியர் வேலை வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்டவரை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கர்நாடகா, பெங்களூர் வடக்கு, கே.ஆர்.புரம் பகுதியைச் சேர்ந்த குமார் ராஜன் மகன் அருண் கே. ராஜன் என்பவர் சிலருடன் சேர்ந்து போலியான ஆவணங்களை உருவாக்கி முகநூலில் போலியான விளம்பரம் செய்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து மேற்படி தனிப்படை போலீசார் நேற்று (29.06.2022) பெங்களூரில் வைத்து மேற்படி எதிரி அருண் கே. ராஜனை கைது செய்தனர்.

மேலும் இந்த மோசடியில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த டென்னீஸ் என்பவர் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளது. மேலும் எதிரி அருண் கே. ராஜனுடன் பலர் இந்த மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் சைபர் குற்றப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பணம் மோசடியில் ஈடுபட்டவரை கைது செய்த தூத்துக்குடி‌ சைபர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையிலான தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் பாராட்டினார்.

Previous Post Next Post