காயாமொழியில் ரூ. 1.05 கோடி மதிப்பில் புதிய மருத்துவ கட்டிடங்கள் - கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்.!


தூத்துக்குடி மாவட்டம் காயாமொழி ஊராட்சிக்குட்பட்ட காயாமொழி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நடைபெற்ற விழாவில் ரூ.1.05 கோடி மதிப்பில் பல்வேறு புதிய மருத்துவ கட்டிடங்களை மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா ஆகியோர் முன்னிலையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி இன்று திறந்து வைத்தார்.

தொடர்ந்து விழாவில் கனிமொழி எம்.பி தெரிவித்ததாவது: 

தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சியில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் தரப்பட்டுள்ளன. இன்று சுகாதாரத்துறை சார்பில் கிட்டத்தட்ட ரூ.1.05 கோடி மதிப்பிலான கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.  

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேசும்பொழுது ஒன்றை குறிப்பிட்டு சொன்னார். இன்னும் ஏறத்தாழ ரூ.2 கோடி மதிப்பிலான திட்டத்திற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. விரைவிலேயே முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நிறைவேற்றி தரப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். 

அதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதுமட்டுமல்லாமல் நான் அவரிடம் தூத்துக்குடி மாவட்ட மக்களின் கோரிக்கையின் அடிப்படையிலான நீண்ட பட்டியலை தந்திருக்கிறேன். அதையும் விரைவிலே நிறைவேற்றி தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. 

ஏனெனில் தமிழ்நாடு முதலமைச்சர் அதிகமாக நம்பிக்கை வைத்திருக்கக்கூடியவர்களில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் ஒருவர். அதை நீங்கள் நிறைவேற்றி தருவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. 

நான் இங்கே ஒன்றை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தினமும் 15 கிலோமீட்டர் ஓட்டப்பயிற்சி செய்பவர். நாம் அவரை பின்பற்றி குறைந்தது நாளொன்றுக்கு 5 கிலோமீட்டர் தூரம் ஓடினாலோ அல்லது நடந்தாலோ நோய் நம்மை அண்டாமல் ஆரோக்கியமாக வாழலாம். 

மருத்துவ உதவிகள் நமக்கு தேவைப்படுவதில்லை. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் உலகத்தில் எந்த மூலைக்கு சென்றாலும் அவர் இருக்கும் பகுதியில் தினமும் ஓட்டப்பயிற்சி செய்து வருகிறார். எனவே அவர் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார்.

மக்களை தேடி மருத்துவம் என்ற பெயரிலே சமீபத்தில் பிபிசி ஒரு கட்டுரை எழுதியிருந்தார்கள். வட இந்தியாவில் இருக்கக்கூடிய அந்த மாநிலங்களை எல்லாம் மிஞ்சக்கூடிய வகையிலே பெயர் பெற்றுக்கொண்டிருக்கிறது. 

மருத்துவ துறையாக இருக்கட்டும், சுகாதார வசதியாக இருக்கட்டும் எல்லாவற்றிலும் முன்னேறிய ஒரு மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதற்கான காரணங்கள் அதை ஆராய்ந்து சொல்லக்கூடியது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திராவிட மாடல் ஆட்சிதான் காரணம் என்பதை சுட்டிக்காட்டி எழுதியிருக்கிறது. 

இன்றைக்கு அனைவரும் குறிப்பிட்டு சொன்னதுபோல வேறு எங்கையும் கேள்விப்படாத அமெரிக்காவிலே கூட ஒபாமா ஆட்சி பொறுப்பிலே இருந்தபொழுது மக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை மக்களுக்கு கொண்டு போய் 


சேர்ப்பதற்கு அவர் எவ்வளவு பாடுபட வேண்டியிருந்தது நாம் படித்து தெரிந்து கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு நாட்டிலேயும் மருத்துவ வசதிகள் பெறுவதற்கு அந்த மக்கள் மிகப் பெரிய அளவிலே போராட வேண்டியிருக்கிறது. 

வளர்ந்திருக்கக்கூடிய நாடுகளில்கூட வயதானவர்களுக்கு மருத்துவ செலவுகள் மற்றும் மருத்துவ வசதிகள் கிடைக்காது. அது குடும்பத்தையே அழிக்கக்கூடிய அளவுக்கு அந்த செலவு இருக்கும். 

ஆனால் தமிழ்நாட்டிலே மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் வாயிலாக நேரடியாக வீட்டிற்கு சென்று சிகிச்சை அளிக்கப்படுகிறது. மக்களை தேடி மருத்துவத்தை கொண்டு போய் சேர்த்திருப்பது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடைய அரசு என்பதை நான் இங்கே பெருமையோடு சொல்லிக்கொள்ள முடியும். 

இங்கே பெரியோர்களுக்கு காலில் அடிபட்டு நடக்க முடியாமல் வலியோடு இருப்பார்கள். ஆனால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுப்பதற்கான வசதி வாய்ப்புகள் இல்லாமல் அவதியுற்று வருகிறார்கள். 

அப்படிப்பட்ட முதியோர்களுக்கும், படுக்கையில் இருக்கும் நோயாளிகளுக்கும் தேவையான பிசியோதெரபி பயிற்சியினை மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் வாயிலாக வீட்டிற்கே சென்று பயிற்சி வழங்கப்படுவதால் அதிக அளவு நோயாளிகள் பயனடைந்து வருகிறார்கள்.

அடுத்த தலைமுறை ஆரோக்கியமாக இருக்க காலை உணவு திட்டம். இன்றைக்கு இந்தியாவிலேயே முதலில் மதிய உணவு திட்டம் என்பதை சொல்லிக்கொடுத்தது தமிழ்நாடுதான். இப்பொழுது காலை உணவு திட்டம். 

நிறைய பிள்ளைகள் உணவில்லாமல், பசியினால் படிப்பில் கவனம் செலுத்த முடியாத சூழ்நிலையால் பாதிக்கப்படுகிறார்கள். அந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக, பள்ளி மாணவர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக, இந்த காலை உணவு திட்டத்ததை நம்முடைய அரசு இங்கே அறிமுகப்படுத்தியிருக்கிறது. 

விரைவிலே எல்லா பள்ளிகளிலும் எப்படி மதிய உணவு திட்டம் உள்ளதோ அதேபோல அடுத்த ஆண்டில் இருந்து இந்த காலை உணவு திட்டமும் வழங்கப்படும் என்பதை நான் பெருமையோடு எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு செய்தியாக உருவாக்கி தந்திருக்கிறோம். 


இப்படி எல்லாருக்கும் வழிகாட்டக்கூடிய வகையிலே அதுவும் முக்கியமாக சுகாதாரத்துறையாக இருக்கட்டும், கல்வியாக இருக்கட்டும் தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது. 

இங்கே நாம் வைத்திருக்கக்கூடிய கோரிக்கைகளையும், மீன்வளத்துறை அமைச்சர் வைத்திருக்கக்கூடிய கோரிக்கை அதாவது அவருடைய திருச்செந்தூர் தொகுதியிலே அரசு மருத்துவமனையை உருவாக்கி தர வேண்டும் என முக்கியமான கோரிக்கை வைத்திருக்கிறார்கள். 

ஏனெனில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமியை தரிசிக்க வரும் பக்தர்களை பாதுகாக்க அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் வழங்கிட அரசு மருத்துவமனை செயல்பட்டால் உதவியாக இருக்கும் என்று உயர்ந்த எண்ணத்தில் இக்கோரிக்கையை வைத்திருக்கிறார்கள் 

இதனையும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் நிறைவேற்றி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார்.

மீன் வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது: 

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை மூலம் காயாமொழி ஆரம்ப சுகாதார நிலையம் சித்தா பிரிவு கட்டிடம், ஒட்டநத்தம் ஆரம்ப சுகாதார நிலையம் சித்தா பிரிவு கட்டிடம், 

சாத்தான்குளத்தில் 2 துணை சுகாதார நிலையம் கட்டிடம், மாப்பிள்ளையூரணி செவிலியர் குடியிருப்பு கட்டிடம் ஆகிய புதிய கட்டிடங்களை இன்று திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் கல்வியும், சுகாதாரமும் இரு கண்கள் என்று நினைக்கிறார்கள். இன்றைக்கு குறிப்பாக சொல்ல வேண்டுமென்று சொன்னால் தமிழ்நாடு முதலமைச்சர் எந்தெந்த துறை முடுக்கிவிட வேண்டுமோ அந்த வகையில் அநத துறைகளை முடுக்கிவிட்டு, 

எவ்வளவு தூரம் பணியாற்ற முடியுமோ அவ்வளவு பணியாற்றி இன்றைக்கு சுகாதாரத்துறையினுடைய அமைச்சர் சென்னையில் இருக்கின்றாரா, தூத்துக்குடியில் இருக்கின்றாரா இல்லை கோயம்புத்தூரில் இருக்கின்றாரா, 

நாகர்கோவிலில் இருக்கின்றாரா என்று தெரியாத அளவுக்கு சுகாதார பணிகளை முடுக்கி விடுகின்ற அமைச்சராக இன்று செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

காயல்பட்டிணத்தில் ரூ.60 கோடியில் சுகாதாரத்துறை கட்டிடம் கட்டுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். அதுபோல் திருச்செந்தூரில் ரூ.25 இலட்சம் மதிப்பில் சித்தா மருத்துவ கட்டிடம் கட்டுவதற்கு பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. 

குலசேகரப்பட்டிணத்தில் இருக்கின்ற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டிடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் இன்றைக்கு பலமாக இருக்கிறது. கொரோனா காலத்தில் கூட நாடாளுமன்ற உறுப்பினர் சென்னையில் இருந்து தன்னந்தனியாக வந்து மக்களுக்கு பணிகளை ஆற்றுகின்ற பொழுது நாடாளுமன்ற உறுப்பினரை மாவட்டத்தில் உள்ள அத்தனை மக்களும் பாராட்டுகின்ற நிலையினை பெற்றுருக்கின்றார்கள். 

நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களை பற்றி சொல்ல வேண்டுமானால் பல்வேறு கோரிக்கைகளை பல்வேறு வகையிலே முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றி தருகின்ற நாடாளுமன்ற உறுப்பினராக இன்றைக்கு செயல்படுகின்றார். 

அந்த வகையிலே இன்றைக்கு பல்வேறு கோரிக்கைகளை நம்முடைய சுகாதாரத்துறை அமைச்சருடைய கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறோம். கடந்த காலத்தில் நம்முடைய முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் காயல்பட்டிணத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்திலே பேசுகின்ற பொழுது 

அன்றைக்கு தூத்துக்குடியிலே அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வருகின்றது என்று சொல்லுகிற பொழுது அன்றைய சட்டமன்ற உறுப்பினர் ஜெனிபர்சந்திரன் அவர்களின் கோரிக்கையை ஏற்று கோவில்பட்டியிலும், திருச்செந்தூரிலும் அரசு மருத்துமனை அமையும் என தெரிவித்தார்கள். 

குறிப்பாக திருச்செந்தூர் இன்றைக்கு சுற்றுலா தலமாக உள்ளது. அருள்மிகு சுப்பிரமணிய சுவாமியை வணங்குவதற்கு பக்தர்கள் வருகின்றார்கள். அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அனைத்து பணிகளுக்கும் வருகின்ற 28ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்கள். 

ஏறக்குறைய ரூ.300 கோடியில் இந்த பணிகளை செய்ய இருக்கின்றார்கள். அந்த பணியுடன் திருச்செந்தூரில் மருத்துவமனையும் அமைய வேண்டும் என்ற வலுவான கோரிக்கையை நான் இங்கு வைக்கிறேன் என மீன் வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது: 

திறப்பு விழாவின் மூலம் மாப்பிள்ளையூரணியில் ஒரு செவிலியர் கூடம் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலும், ஒட்டநத்தம் மற்றும் காயாமொழி பகுதியில் தலா ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் 2 சித்தா மருத்துவ பிரிவையும், சாத்தான்குளம் பகுதியில் தலா ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் 2 துணை சுகாதார நிலைய கட்டிடமும் கட்டி முடிக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது. 

இந்த மாவட்டத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. புதுக்கோட்டை துணை சுகாதார நிலையத்தில் ரூ.60 லட்சம் மதிப்பில் புற நோயாளிகள் பிரிவு கட்டப்பட்டு வருகிறது.  

ஆனந்தபுரத்தில் துணை சுகாதார நிலையத்தில் புற நோயாளிகள் பிரிவு கட்டப்பட்டு வருகிறது. சுகாதார நிலையங்களை பொறுத்தவரை ஆலந்தலை, கருங்கடல் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது. ரூ.1.5 கோடி மதிப்பில் முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கிற 


இந்த நேரத்தில் ரூ.1.95 கோடி மதிப்பில் 6 கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 136 அறிவிப்புகள் மக்கள் நல்வாழ்வு துறை மூலம் தரப்பட்டிருக்கிறது. 

அந்த வகையில் 16 அறிவிப்புகள் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்தவை. தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ.26.26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் பச்சிளம் குழந்தைகள் பிரிவு நவீன உபகரணங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் காயாமொழி, மோகனூர், புதுக்கோட்டை, வல்லநாடு ஆகிய பகுதியில் ரூ.5.5 கோடி மதிப்பில் வட்டார சுகாதார நிலையங்கள் கட்ட பணிகள் நடைபெற இருக்கிறது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் 28 சுகாதார நிலைய கட்டிடங்கள் கட்டப்பட இருக்கிறது. நீரழிவு நோய், நாள்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்காக கடந்த ஆண்டு முதலமைச்சர் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை துவக்கி வைத்தார்கள். 

இந்த திட்டம் இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் செயல்படுத்தாத திட்டம். கொரோனா காலத்திலும் மக்களை சந்தித்த சிறப்பான நாடாளுமன்ற உறுப்பினர் நம் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர். 

அந்த வகையிலே தமிழக முதல்வர் அவர்களிடம் அவர் வைக்கிற கோரிக்கை எல்லாம் நிறைவேற்றப்பட்டு கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் இன்றைக்கு 445 பேருக்கு வைரஸ் காய்ச்சல் உள்ளது. தூத்துக்குடியில் ஒருத்தருக்கு கூட காய்ச்சல் இல்லை என்பது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.

கடந்த ஜனவரியில் இருந்து தற்போது வரை இந்த வைரஸ் காய்ச்சலுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் 3 பேருக்கு மட்டும் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது நலமாக இருக்கின்றனர். அந்த அளவுக்கு தூத்துக்குடியிலே மருத்துவ துறை சிறப்பாக உள்ளது. 

அதுபோல நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சர் கடைக்கோடி தமிழனுக்கும் மருத்துவம் கிடைக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்வார்கள். அந்த பணியினை இந்த அரசு செய்து கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து 3 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சித்த மருத்துவ பெட்டகங்களை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி வழங்கினார். 

நிகழ்ச்சியில் துணை இயக்குநர்கள் (சுகாதார பணிகள்) ச.பொற்செல்வன் (தூத்துக்குடி), ஜெகவீரபாண்டியன் (கோவில்பட்டி), க.சுந்தரலிங்கம் (மருத்துவ பணிகள் காசம், தூத்துக்குடி), யமுனா (மருத்துவ பணிகள் தொழுநோய்), தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் (பொ) கலைவாணி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் இராஜசெல்வி, 

திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் புஹாரி, மாவட்ட ஆவின் தலைவர் சுரேஷ்குமார், திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் செல்வி வடமலைப்பாண்டியன், நகர்மன்ற தலைவர்கள் சிவஆனந்தி (திருச்செந்தூர்), முத்துமுகமது (காயல்பட்டிணம்), காயாமொழி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரன், வட்டார மருத்துவ அலுவலர்கள் ஜலின் சுமதி (முதலூர்), க.தங்கமணி (ஒட்டநத்தம்), வட்டாட்சியர்கள் கலந்துகொண்டனர்.

Previous Post Next Post