தமிழக முதல்வரின் கனவை நனவாக்க பள்ளி மாணவ, மாணவிகள் நன்றாக படிக்க வேண்டும் - மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு.!

 

தமிழக அரசின் 2021-2022ம் ஆண்டிற்கான பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாநகர பகுதிகளில் உள்ள எஸ்.ஏ.வி, காரப்பேட்டை பள்ளியில் சைக்கிள் வழங்கியப்பின் கால்டுவெல் பள்ளியில் 159 மாணவ-மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார். 

பின்னர் அவர் பேசுகையில்: இந்த பள்ளி 231 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது வெள்ளைக்காரன் ஆட்சிச் செய்த காலத்திற்கு முன்பே கால்டுவெல் என்பவரால் நடத்தப்பட்டு, வருகிறது. பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவுத்திட்டத்தைக் கொண்டு வந்தார். கலைஞர் ஆட்சியில் அது விரிவுப்படுத்தப்பட்டது. தற்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் 1 முதல் 5 வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை துவக்கியுள்ளார். அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் 21 பள்ளிகளில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 

அதேபோல் பெண்களுக்கு பாதுகாப்பு, போதை ஒழிப்பு உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்வுகள் தனியார் மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் அதுகுறித்த விழிப்புணர்வு ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளது. மாநகரில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் துவங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

தூத்துக்குடி எல்லா வகையிலும் வளர்ச்சியை அடையும் கட்டமைப்புகள் துறைமுகம், விமான நிலையம், சாலை போக்குவரத்து, இரயில் போக்குவரத்து வசதிகள் இருந்து வருகின்றன. தூய்மையான மாநகரத்தை உருவாக்கும் வகையில் நகரம் சுத்தமாக இருக்க வேண்டும். தினமும் 60 வார்டுகளில் 150 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. 90 டன் மக்கும் குப்பையும், 60 டன் மக்காத குப்பையும் பிரிக்கப்பட்டு வருகிறது. இதில் பல நெகிலி கழிவுகளும் இருப்பதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. நமது வீட்டை சுத்தமாக வைத்திருப்பது போல் நகரையும் சுத்தமாக வைக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இதை உங்களது பெற்றோர்களிடம் நீங்கள் எடுத்துச் சொல்ல வேண்டும். 

உடல் ஆரோக்கியம் எல்லோருக்கும் முக்கியம். விவசாயம் பார்க்கின்றவர்கள் 95 வயதிலும் இன்று வரை உழைக்கிறார்கள். அதற்கு காரணம் ஆரோக்கியம் சார்ந்த உடற்பயிற்சி, மிதிவண்டி ஓட்டுவதன் மூலம் உள்ளங்கால் முதல் அனைத்து பகுதிகளும் ஒரே அளவு இரத்த ஓட்டம் பாய்வதால் நமது உடல் ஆரோக்கியம் பெறுகிறது. 

தற்போது, 20 வயதிலேயே பலருக்கும் சுகர் வருகிறது. விடாமுயற்சி, தன்னம்பிக்கை இரண்டும் இருந்தால் எல்லா துறையிலும் நாம் சாதிக்கலாம். காலை எழுந்தவுடன் நமது கடமைகளை முடித்து விட்டு, பின்பு பள்ளி படிப்பு, டியூசன், பொழுதுபோக்கு மூலம் நாம் வாழ்க்கையை அனுபவிக்றோம். தற்போது விஞ்ஞான உலகமாக இருப்பதால், எல்லோரிடமும் செல்போன் இருக்கிறது. அதில் தேவையானவைகளை மட்டுமே பார்க்க வேண்டும், படிக்க வேண்டும். முழுநேரமும் அதில் கவனம் செலுத்த கூடாது. படிப்பில் 80 சதவீதம் தேர்ச்சி, தொடர் முயற்சி பின்னர் 100 சதவீதம் தேர்ச்சி என்று தொடுவதை போல் அனைத்து மாணவ-மாணவிகளும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் சீரிய திட்டமான இலவச மிதிவண்டியை வழங்கியுள்ளார். அவரது கனவை நனவாக்கும் வகையில் மாணவ-மாணவிகள் நல்லமுறையில் படித்து எதிர்காலத்தில் தமிழகத்தின் பெருமையை இந்தியாவில் நிலைநாட்ட வேண்டும், என்று உருக்கமாக மாணவ-மாணவியர்களிடையே பேசினார். 

விழாவில் கால்டுவெல் பள்ளி தாளார் ஸ்டேன்லி வேதமாணிக்கம், தலைமையாசிரியர் ஜேக்கப் மனோகர், உடற்கல்வி ஆசிரியர் பெலின்பாஸ்கர், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஸ் மற்றும் ஜோஸ்பர் உட்பட ஆசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post