தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய நல்வாழ்வு குழுமம் இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆய்வு.!

 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேசிய நல்வாழ்வு குழுமம் இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆய்வு மேற்கொண்டார். 

தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கணேஷ்நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் தேசிய நலவாழ்வு குழுமம் செயல்பாடுகள் குறித்தும் தேசிய நலவாழ்வு குழுமம் இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ்,  மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ்,  தலைமையில், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ,  முன்னிலையில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகளின் வருகைப்பதிவேடு, மருந்தகத்தில் வைக்கப்பட்டுள்ள மருந்துகள் அவற்றில் பொறிக்கப்பட்டுள்ள தயாரித்த நாள், காலாவதி நாள் ஆகியவற்றை ஆய்வு செய்ததோடு இருப்பு வைத்திருக்கும் மருந்துகளையும் பார்வையிட்டார். மேலும் சித்தா பிரிவு, கர்ப்பிணி பெண்கள் பிரிவு, ஸ்கேன் பரிசோதனை மையம், கழிப்பிடம், அவசர சிகிச்சை பிரிவு, கருப்பை வாய் மற்றும் மார்பக பரிசோதனை மையம் பதிவேடு, மருந்தகம், மருந்து கிடங்கு, பிரசவ அறை மற்றும் பிரசவ பின் கவனிப்பு பிரிவு ஆகியவற்றை பார்வையிட்டார்.

மேலும், அங்கு தொழுநோயாளிகளுக்கான விழிப்புணர்வு முகாமினை பார்வையிட்டு நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் குறித்தும், சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்ததோடு அவர்களுக்கான மருந்து தொகுப்புகளை நோயாளிகளுக்கு வழங்கினார். அதனைத்தொடர்ந்து ஆய்வகத்தினை ஆய்வு மேற்கொண்டு அங்கு எடுக்கப்படும் பரிசோதனைகளின் வகைகளை கேட்டறிந்து நோயாளிகளுக்கு வழங்கப்படும் பரிசோதனை சான்றிதழ் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் செயல்பட்டு வரும் அவசர சிகிச்சை மையத்தில் ஆண்டுக்கு சுமார் 60,000 பேர் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். விபத்து, இருதய நோய், பிற காயங்கள், தீ விபத்து, பாம்புகடித்தல் போன்ற பல்வேறு அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகளின் வசதிக்காக கீழ்தளத்தில் விபத்து மற்றும் அவசரசிகிச்சை பிரிவு மறு சீரமைக்கப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன் திறந்து வைக்கப்பட்டது. 


தற்போது இந்த பிரிவில் நோயாளிகளுக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறியப்பட்டது. மேலும் நோயாளிகளுக்கு விரைவாக சிகிச்சை அளித்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து இருதயத்தில் உள்ள இரத்த நாளத்தில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்ய நாளத்தின் உள்ளீடாக பலூன் ஒன்றினை செலுத்தி அதன் மேல் உள்ள STENT வலை பொருத்தப்படும் ஆஞ்சியோபிளாஸ்டிக் பிரிவினை பார்வையிட்டு அறுவை சிகிச்சை முறைகள் குறித்தும் நோயாளிகளுக்கு வழங்கும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறியப்பட்டது. 

மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், பச்சிளம் குழந்தைகள் பிரிவு, பேறுகால அவசர சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை அறை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கணேஷ்நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று தொற்றா நோய்களுக்கான சிகிச்சை வழங்கப்படுவதையும், சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் வருகைப்பதிவேடுகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. 

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மக்களை தேடி மருத்துவ சிகிச்சை முறைகள், அவர்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும் மருத்துவ அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் அனைவரும் சேவையை தொடர்ந்து சிறப்பான முறையில் நோயாளிகளுக்கு வழங்கிட அறிவுறுத்தினார்.

ஆய்வுகளில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன், இணை இயக்குநர் நலப்பணிகள் கற்பகம், இணை இயக்குநர் தேசிய நலக்குழுமம் ம.கிருஷ்ணலீலா, மக்களை தேடி மருத்துவம் திட்ட சிறப்பு கண்காணிப்பாளர் எம்.மதுசூதனன், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் சிவக்குமார், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி செவிலியர் கல்லூரி முதல்வர் கலைவாணி, உதவி திட்ட மேலாளர் மருத்துவம் ஸ்ருதி, தூத்துக்குடி மாநகராட்சி நல அலுவலர் சு.அருண்குமார், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார், மருத்துவ அலுவலர்கள் வி.கார்த்திக் (மாப்பிள்ளையூரணி), ஆர்த்தி (தூத்துக்குடி கணேஷ்நகர்), மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post