கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு - ஒருவர் கைது, ரூபாய் 3,700/- மீட்பு.!

 

தூத்துக்குடி பாரதி நகரை சேர்ந்த தங்கராஜ் மகன் ரவிசேகர் (58) என்பவருக்கு சொந்தமான மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வ.உ.சி மார்க்கெட் பகுதியில் உள்ள பழைய இரும்பு பொருட்கள் கடையில் கடந்த 28.12.2022 அன்று இரவு மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கடையில் இருந்த ரூபாய் 2,500/- பணத்தை திருடி சென்றுள்ளனர்.

அதேபோன்று அன்றைய தினமே தூத்துக்குடி தெற்கு காட்டன்ரோடு எஸ்.எஸ். மூர்த்தி தெருவில் உள்ள ஒரு மருந்து கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து அங்கு இருந்த ரூபாய் 16,000/- பணத்தையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து சம்மந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் அய்யப்பன் தலைமையில் உதவி ஆய்வாளர் முருகப்பெருமாள் மற்றும் வடபாகம் காவல் நிலைய தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர்  மகாலிங்கம் மற்றும் முத்தையாபுரம் காவல் நிலைய காவலர் முத்துப்பாண்டி ஆகியோர் அடங்கிய நகர உட்கோட்ட தனிப்படை போலீசாருக்கு எதிரியை கண்டுபிடித்து பணத்தை மீட்குமாறு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில் மேற்படி தனிப்படை போலீசார் அப்பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி கேமாரா பதிவுகள் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி மேல சண்முகபுரம் தாமோதர் நகரை சேர்ந்த ராஜா மகன் சரவணன் (19) என்பவர் மேற்படி கடைகளின் பூட்டை உடைத்து பணத்தை திருடியது தெரியவந்தது.

உடனே மேற்படி போலீசார் சரவணனை கைது செய்து அவரிடமிருந்த திருடப்பட்ட பணம் ரூபாய் 3,700/-யும் மீட்டனர். மேலும் இதுகுறித்து மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சரவணன் மீது ஏற்கனவே தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் 12 திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post