135 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்த ஸ்ரீவித்யாவுக்கு ’கோவையின் சேவைத் தாய்’ விருது ... தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் வழங்கினார்.

10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்த கோவை இளம் பெண்ணுக்கு தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி விஜயன், ’கோவையின் சேவை தாய்’ என்ற விருதை வழங்கி அந்த பெண்ணை பெருமைப்படுத்தி உள்ளார். 

தாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தும் கிடைக்கிறது. ஆனால், பிரசவத்துக்கு பின்னர், உடல் நல பாதிப்புகள் காரணமாக சில தாய்மார்களுக்கு பால் அதிகமாக சுரக்காத நிலை ஏற்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு போதுமான தாய்ப்பால் கொடுக்க முடிவதில்லை.

அதேபோல பிரசவத்தின்போது தாய் உயிரிழந்து விட்டாலும், தனிமையில் வாடும் குழந்தைகள், ஆதரவின்றி மீட்கப்படும் தொட்டில் குழந்தைகள், குறைந்த எடை கொண்ட குழந்தைகள் ஆகியோருக்கும் தாய்ப்பால் இல்லாத நிலை இருக்கிறது. இவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு பெரும் பிரச்சினையாக உள்ளது. 

இதுபோன்ற இடர்பாடுகளை தவிர்க்க அரசு சார்பில் தாய்ப்பால் வங்கி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை பற்றி பலர் அறிந்திருந்தாலும், தாய்மார்கள் சிலர் தானம் அளிக்க முன்வருவதில்லை. ஒரு சிலர் முன்வருகிறார்கள்.

ஒட்டு மொத்த தமிழகத்துக்கும் முன்னுதாரணமாக கோவை வடவள்ளி அருகே உள்ள பி.என்.புதூரைச் சேர்ந்த பைரவ் என்பவரது மனைவி ஸ்ரீவித்யா(27) என்பவர் கடந்த 10 மாதங்களாக, அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுக்காக 135லிட்டர் தாய்ப்பால் தானம் செய்து உள்ளார். இது  அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. 

ஸ்ரீவித்யாவின் இந்தச் சேவையை பாராட்டி ’யாதும் கோவை’ மற்றும் ’புதிய பாதை’ அமைப்பினர் இணைந்து, பாராட்டு விழா ஒன்றை கோவையில் நடத்தினார்கள். விழாவில் ஸ்ரீவித்யாவிற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியுமான ஏ.கே.எஸ்.விஜயன் கலந்துகொண்டு கோவையின் சேவைத்தாய் என்ற விருதை வழங்கி உள்ளார். 135 லிட்டர் தாய்ப்பால் தானமாக வழங்கிய இளம்பெண் ஸ்ரீவித்யாவின் இந்த தானம் மற்ற இளம் தாய்மார்களுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. 

இந்த விழாவில்ஸ்ரீ வித்யாவின் கணவர் பைரவர் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Previous Post Next Post