போலி ஆவணம் மூலம் 4.80 ஏக்கர் நிலம் கிரையம் செய்து மோசடி : ஒருவர் கைது - நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை.!

 

ஓட்டபிடாரம் பகுதியில் ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணம் மூலம் கிரையம் பதிவு செய்து நில மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி ஒட்டபிடாரம் தெற்கு ஆவரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் முனியசாமி, மேற்படி முனியசாமியின் தந்தை சுப்பையா  என்பவருக்கு முனியசாமி உட்பட உத்திரம்மாள், வள்ளியம்மாள், முருகன், ஆறுமுகசாமி ஆகிய 5 பேர்கள் வாரிசுகள் ஆவார்கள், சுப்பையாவுக்கு பூர்விகமாக பாத்தியப்பட்ட 4 ஏக்கர் 80 செண்டு நிலம் உள்ளது. மேற்படி நிலத்தை வாய்மொழியாக முனியசாமிக்கு ஒதுக்கப்பட்டும், மேற்படி நிலத்தில் 30 வருடங்களாக முனியசாமி விவசாயம் செய்து தீர்வை செலுத்தி அனுபவம் செய்து வந்துள்ளார். 

மேற்படி நிலத்திற்கு முனியசாமி பெயரில் பட்டா எண் தாக்கலாகி இருந்து வந்துள்ளது. இந்நிலையில் மேற்படி நிலத்தை அபகரிக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் புகார்தாரரின் உடன்பிறந்த சகோதரர் ஆறுமுகசாமி (எ) முருகன் என்வரின் மகன்கள் கருப்பசாமி, காளிராஜ் ஆகியோர்கள் மற்ற எதிரிகளுடன் கூட்டுச்சேர்ந்து மேற்படி நிலத்திற்கு முனியசாமி பெயரில் உள்ள பட்டா எண்ணை  பயன்படுத்தி, கருப்பசாமியின் உறவினரான தூத்துக்குடி புதிய துறைமுகம் லேபர் காலனியைச் சேர்ந்த பூப்பாண்டி மகன் முனியசாமி (39) என்பவரை மேற்படி சுப்பையா மகன் முனியசாமி போன்று ஆள்மாறாட்டம் செய்தும், 5-வது எதிரியான தூத்துக்குடி ஓட்டபிடாரம் இந்திராநகரைச் சேர்ந்த தங்கசாமி மகன் வேல்முருகன் என்பவர் ஏற்பாட்டின் படி 1-வது எதிரியான முனியசாமி பெயரில் போலியான ஆதார்கார்டினை தயார் செய்து அதை உண்மையான ஆவணமாக பயன்படுத்தி, 2 ஏக்கர் 01 செண்டு நிலத்தை 2-வது எதிரியான பாஞ்சாலங்குறிச்சி இந்திராகாந்தி நகரைச் சேர்ந்த முருகன் மகன் கருப்பசாமிக்கு மோசடியாக கிரையம் செய்து கொடுத்தும், 

இதேபோல் ஓட்டப்பிடாரம் கிராமம் சர்வேயில் உள்ள 2 ஏக்கர் 79 செண்டு நிலத்தை 2-வது எதிரி கருப்பசாமிக்கு மோசடியாக கிரையம் செய்து கொடுத்துள்ளார். மேற்படி மோசடி கிரைய ஆவணத்தில் மோசடி விபரம் தெரிந்தே கருப்பசாமியின் சகோதரரான காளிராஜ் மற்றும் கருப்பசாமிக்கு தெரிந்த நபரான 4-வது எதிரியான பாஞ்சாலங்குறிச்சி இந்திராகாந்தி நகரைச் சேர்ந்த முனியசாமி மகன் முத்துமாரியப்பன் ஆகியோர்கள் சாட்சி கையொப்பம் செய்துள்ளார்கள்.

பின்னர் மேற்படி சொத்தை மோசடியாக கிரையம் பெற்ற கருப்பசாமி, பெற்ற சொத்தை மட்டும் கருப்பாசமிக்கு பழக்கமான இவ்வழக்கின் 6-வது எதிரியான தூத்துக்குடி எட்டையாபுரம் ரோடு கே.வி.கே நகர் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் கேசவன் என்பவருக்கு மோசடியாக கிரையம் செய்து கொடுத்தும், பின்னர் கேசவன் மேற்படி சொத்தில் 73 செண்டு நிலத்தை 7-வது எதிரியான கோவில்பட்டி நடராஜபுரம் கிழக்கு தெருவைச் சேர்ந்த ராமையா மகன் இசக்கிராஜ் என்பவருக்கு மோசடியாக கிரையம் செய்து கொடுத்துள்ளார்.  கேசவன், இசக்கிராஜ், ஆகியோர்கள் மேற்படி சொத்தானது ஆள்மாறாட்டம் மற்றும் மோசடியாக கிரையம் செய்து பெறப்பட்ட சொத்து என்ற விபரம் தெரிந்தே கிரையம் பெற்றுள்ளார்கள்.

இந்நிலையில் மேற்படி மோசடியாக கிரையம் பெற்ற கருப்பசாமி என்பவரை கடந்த 06.12.2022 அன்று நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து மேற்படி வழக்கில் 1-வது எதிரி முனியசாமி என்பவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சம்பத் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர் நேற்று தூத்துக்குடி புதிய துறைமுகம் லேபர் காலனியில் உள்ள எதிரி முனியசாமி வீட்டு முன்பு வைத்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பியுள்ளனர். மேலும் இதுகுறித்து நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post