பழனி கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாக சாலைக்கு ஊர்வலமாக வந்த சண்முக நதி தீர்த்தம்

 பழனி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலையில் வைப்பதற்காக சண்முகநதி புனித தீர்த்தத்தை கலசங்களில் சிவாச்சாரியார்கள் எடுத்துவந்தனர்.

முருகன் கோவில் கும்பாபிஷேகமானது வருகிற 27ம் தேதி நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை முதல் யாகசாலை வேள்விகள் துவங்குகிறது. இதனை எடுத்து பழனி மலைக்கோவில் மற்றும் சுற்றுப் பிரகாரங்களில் உள்ள தெய்வங்கள் புனித கலசங்களில் ஆவாகனம் செய்யப்பட்டு யாகசாலையில் வைத்து பூஜைகள் நடத்தப்படும். 

இதற்காக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் புனித தீர்த்தங்கள் கொண்டு வந்து கொடுக்கலாம் என திருக்கோவில் நிர்வாகம் அறிவித்திருந்தது. எடுத்து தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுவதும் உள்ள புனித நதிகளில் இருந்து தீர்த்தங்கள் எடுத்து வரப்பட்டு கோவில் நிர்வாகத்திடம் பக்தர்கள் கொடுத்துள்ளனர். 

இதேபோல பழனி கோவில் கும்பாபிஷேகத்தின் போது மலைக்கோவிலில் பூஜைகள் செய்யும் அயன்மிராசு பண்டாரங்கள்‌ மற்றும் பழனி அர்ச்சக ஸ்தானிகத்தை சேர்ந்த சிவாச்சாரியார்கள் சார்பில் பழனியின் புனிதநதியான சண்முகநதியில் இருந்து புனித தீர்த்தம் எடுத்துச் செல்லப்படுவது வழக்கம். 

இந்நிலையில் இன்று பழனி அர்ச்சக ஸ்தானிக சங்கத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் சண்புகநதியில் இருந்து புனிததீர்த்தத்தை புனித கலசங்களில் நிரப்பி தலையில் வைத்து வேதமந்திரங்கள் முழங்க மலைக்கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து சென்றனர். 

இதேபோல நேற்று அயன்மிராசு பண்டாரங்களும் புனிததீர்த்ததை மலைக்கோவிலுக்கு எடுத்து சென்றனன். இவ்வாறு எடுத்துச் செல்லப்படும் புனித தீர்த்தம் அடங்கிய கலசங்கள் யாகசாலையில் வைக்கப்பட்டு ஆவாகனம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். தொடர்ந்து வருகிற 26 மற்றும் 27ம்தேதி நடைபெறும் கும்பாபிஷேகத்தின் போது சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட தீர்த்தங்களை கோபுர கலசங்கள், விமானங்கள் மற்றும் தெய்வச் சிலைகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிலைகளுக்கு சக்தி ஏற்றப்பட்டு, தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படும்.

- பழனி ரியாஸ்

Previous Post Next Post