சென்னையில் நடக்கும் உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கத்தான் சிங்கப்பூர், ஜப்பான் பயணம்.. மு.க.ஸ்டாலின் பேட்டி

 சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு செல்வதன் நோக்கமே அடுத்த ஆண்டு சென்னையில் நடக்கும் உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கத்தான் எனவும், இந்த பயணம் வெற்றிகரமாக முடியும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்துக்கு புதிய முதலீடுகளை ஈர்க்கவும், சென்னையில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கவும் 9 நாள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று புறப்பட்டார். 

சிங்கப்பூரில் அந்நாட்டு அமைச்சர்கள் மற்றும் தொழில் அதிபர்களை சந்திக்கும் முதலமைச்சர், அங்கு நடைபெறவுள்ள முதலீட்டாளர் மாநாட்டில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்வதோடு கலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். 

தொடர்ந்து மே 26 ஆம் தேதி ஜப்பான் நாட்டுக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் மற்றும் ஒசாகா சென்று பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்வதோடு, தொழில் அதிபர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கிறார்.

முன்னதாக சிங்கப்பூர் செல்ல விமான நிலையம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், சட்டமன்ற , நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் புத்தகம் கொடுத்து, வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர். 

சமீபத்தில் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட ஆவடி நாசர் முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த போது, முதலமைச்சர் ஸ்டாலின் அவரிடம் பேசி, அவரின் தோளில் தட்டி வாழ்த்தி அனுப்பினார்.

அதன்பினனர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ;

வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதன் முக்கிய நோக்கமே உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்க தான் என தெரிவித்தார். 

இந்த பயணத்தில் பல நூற்றுக்கணக்கான தொழில் நிறுவனங்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளவுள்ளதாகவும், பயணம் வெற்றிகரமாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தார். 

மேலும் கடந்த ஜூலை 2021  முதல் தற்போது வரை, 226 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு,  2லட்சத்து 95அயிரத்து 339 கோடி முதலீடு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அபர், இதன் மூலம்  4 லட்சத்து 12 ஆயிரத்து 565 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்தார். 

முதலமைச்சருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், தலைமை செயலாளர் இறையன்பு, நிதித்துறை செயலாளர் உதயசந்திரன், முதலமைச்சரின் தனி செயலாளர் தினேஷ் உள்ளிட்டோர் இன்று செல்கின்றனர்.

ஏற்கனவே தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன், மற்றும் சில துறைகளின் செயலாளர்கள் முன்கூட்டியே சிங்கப்பூருக்கு சென்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post