புதிய பாராளுமன்றத்தில் தேவாரம் பாடிய மாணவிக்கு திருக்கோவில் திருத்தொண்டர் அறக்கட்டளை சார்பில் பாராட்டு

புது டெல்லியில் நேற்று முன்தினம் புதியதாக அமைக்கப்பட்ட பாராளுமன்ற திறப்பு நிகழ்ச்சியில் தேவார பதிகம் பாடிய திருப்பூர் மாவட்டம், உடுமலையிலிருந்து பங்கேற்ற கல்லூரி மாணவிக்கு திருக்கோவில் திருத்தொண்டர் அறக்கட்டளை-யின் சார்பில்  அவரது இல்லத்தில் பொன்னாடை அணிவித்து, பாராட்டு தெரிவிக்கப்பட்டு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. 


மாணவியின் பெற்றோர்களும், பண்ணிசைப் பயிற்றுநரும் பொன்னாடை அணிவிக்கப்பட்டு கெளரவப்படுத்தப்பட்டனர். திருக்கோவில் திருத்தொண்டர் அறக்கட்டளையின் அமைப்பாளர் கொங்கு ராமகிருஷ்ணன், பொருளாளர் சரவண சுப்பிரமணியன் தலைமையில் அறக்கட்டளை நிர்வாகிகள் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதுகுறித்து கல்லூரி மாணவியும், பெண் ஓதுவாருமான செல்வி. உமா நந்தினி கூறியதாவது: பல்வேறு இசைப்போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளைப் பெற்றுள்ளேன். புதிய பாராளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவில் தேவாரப்  பண்ணிசை பாடுவதற்கு ஆறு ஓதுவார்களில் ஒருவராக திருவாவடுதுறை ஆதீன குருமகா சந்நிதானங்களின் அருளாணையின்படி கலந்து கொண்டுள்ளேன். மிகவும் பெருமை வாய்ந்த இந்த சரித்திர நிகழ்வு எனக்கு பெரும் பேறாகவும், பெருமையாகவும் உள்ளது. பிரதமர் அலுவலகத்திலிருந்து நிகழ்ச்சி நடைபெறும் தேதியின் நான்கு நாட்களுக்கு முன்னர்தான் தகவல் கிடைத்தது. மிகவும் ஆச்சர்யமாகவும், பிரமிப்பாகவும், என்னால் நம்ப இயலாத நிலைக்குச் சென்றேன். பின்னர் ஆதீனத்தின் அறிவுரைப்படி எனது தாயாருடன் டெல்லிக்குச் சென்று கட்டிடத்தை முதல் நாளிலேயே பார்வையிட்டேன். பின்னர் பிரதமர் அலுவலக அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி மேற்படி நிகழ்ச்சியில் பங்கேற்றேன். தேர்வு பெற்றது முதல் சொந்த ஊருக்கு திரும்பும்வரை நல்ல முறையில் வரவேற்று உபசரித்து தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தனர்.

இன்று காலைதான் சொந்த ஊருக்கு வந்தோம். இதையறிந்து எனக்கு நேரில் பாராட்டு தெரிவித்து, கெளரவப்படுத்திய  திருக்கோவில் திருத்தொண்டர் அறக்கட்டளை-யின் அனைத்து நிர்வாகிகளுக்கும், உடுமலை தமிழிசைச் சங்கத்தின் அனைத்து நிர்வாகிகளுக்கும் எனது சார்பிலும், எனது குடும்பத்தினர்கள் சார்பிலும் மனமார்ந்த மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன்,

இவ்வாறு அவர் கூறினார்.

Previous Post Next Post