விடாமுயற்சியால் டாக்டராகும் காவலர் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வாழ்த்து

*விடாமுயற்சியால் டாக்டர் ஆகும் போலீஸ்! இளைஞர்களுக்கு வழிகாட்டியாக தருமபுரி காவலர் சிவராஜ் திகழ்கிறார்* *சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வாழ்த்து!* 
தருமபுரியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காவல்துறையில் பணியாற்றியபடியே ‘நீட்’ தேர்வு எழுதி வென்று மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் முதுகம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ். கடந்த 2016-ம் ஆண்டு பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 முடித்தார். மருத்துவர் ஆக விரும்பிய சிவராஜுக்கு அப்போதைய சூழலில் மருத்துவக் கல்லூரியில் சேர முடியாத நிலையில்  பி.எஸ்சி., வேதியியல்  பட்டப் படிப்பை முடித்த அவர், 2020-ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் 2-ம் நிலைக் காவலராக தேர்வாகி
தற்போது ஆவடியில் பணியாற்றி வருகிறார். பணிக்கு சென்ற நிலையிலும்  தனது தீராத மருத்துவர் ஆகும்  கனவு தொடர்பான முயற்சிகளை மேற்கொண்டார்.  2022 நீட் தேர்வு எழுதி  குறைவான மதிப்பெண்களை மட்டுமே பெற்றார். ஆனால் விடா முயற்சி மேற்கொண்டு  சிவராஜ் மீண்டும் நடப்பு  2023ம் ஆண்டுக்கான நீட் தேர்வையும் எழுதி 400 மதிப்பெண்கள்  பெற்று  அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பில் சேர சிவராஜ் தகுதி பெற்றார்.
தொடர்ந்து, மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்று கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் தற்போது சேர்க்கை பெற்றுள்ளார். மருத்துவப் படிப்பின் மீது அவர் கொண்டிருந்த தீராத தாகம் காரணமாகவும், தொடர் முயற்சிகளை மேற்கொண்டும் அதில் வெற்றியும் அடைந்துள்ளார் சிவராஜ் இன்றைய இளைஞர்களுக்கு ஓர் வழிகாட்டியாக உருவெடுத்துள்ளார் என்றால் மிகையாகாது. ஊக்கமது கைவிடேல் என்னும் அவ்வையார் வாக்கிற்கிணங்க விடாமுயற்சியால் அவரது மருத்துவர்க் கனவை நிறைவேறியிருப்பது போல இன்றைய இளைஞர்களும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளும் இலக்கு ஒன்றினை நிர்ணயித்து அதனை அடைய முற்படுகின்ற பொழுது வெற்றி நிச்சயமாக  கைகூடும் என்பது உறுதி. 




    
Previous Post Next Post