திருப்பூரில் ஏழாவது திருமணம் செய்ய முயலும் கணவன்... ஆறாவது மனைவி கைக்குழந்தையுடன் வந்து கண்ணீர் புகார்

 திருப்பூரில் பெண்ணை ஏமாற்றி ஆறாவதாக திருமணம் செய்த வாலிபர்,  ஏழாவதாக ஒரு கல்லூரி மாணவியுடன் பழகி திருமணம் செய்ய முயல்வதாகவும், கணவ்ர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், தனது குழந்தையின் எதிர்காலத்துக்கு உரிய உதவியை பெற்றுத்தர வேண்டும் என்று கூறி இளம்பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் வந்து திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது. 


திருப்பூர் சாமுண்டிபுரத்தைச் சேர்ந்த 28 வயதான தேவி என்பவர்   திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு, தனது ஒரு வயது குழந்தையுடன் வந்து புகார் அளித்தார். அப்போது அவர்  கூறுகையில், ‘ சாமுண்டிபுரத்தில் பெற்றோருடன் வசித்து வரும் நிலையில், தனக்கு ஏற்கனவே திருமணமாகி ஒன்றரை வயதில் ஒரு மகள் இருந்தார். நோய்வாய்ப்பட்ட மகள் உயிரிழந்து விட்டார். அதன் பின் முதல் கணவர் என்னைப் பிரிந்து சென்று விட்டார். 

பின்னர் புது பஸ் ஸ்டாண்ட் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் பழக்கமானார். எனது பிரச்னையெல்லாம் கேட்ட அவர், என்னை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தினார்.
 எங்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அவருடன் குடும்பம் நடத்திய போது, அவருக்கு ஏற்கனவே ஐந்து பெண்களுடன் திருமணம் நடந்தது தெரிய வந்தது. இதில் அவரது முதல் மனைவி அனாதையாக்கப்பட்டு குழந்தையுடன் தவிக்கிறார். அவருடன் சேர்த்து 5 பெண்களை கைவிட்டுவிட்டு, அதை மறைத்து என்னை திருமணம் செய்து கொண்டுள்ளதுடன், என்னுடன் குடும்பம் நடத்தும் போதே,காரைக்குடியை சேர்ந்த கல்லூரி மாணவியை ஏழாவதாக திருமணம் செய்ய முயல்கிறார். மேலும் ஐந்தாவது மனைவியுடன் குடும்பம் நடத்தியதும் தெரிய வந்தது.
இது குறித்து கேட்ட போது அவர் என்னை மிரட்டி, துரத்தி விட்டார். அவரைப் பற்றி விசாரித்த போது, ஆதரவற்ற நிலையில் உள்ள, கணவரைப் பிரிந்த பெண்களை திருமணம் செய்து, குடும்பம் நடத்தி, அவர்களிடம் பணம், நகைகளைப் பெற்றுக் கொண்டு, துரத்தி விடுவது, தவறான பாதைக்கு அழைத்துச் செல்வது என பெண்களை ஏமாற்றி வருகிறார்.
இது குறித்து கலெக்டரிடம் புகார் அளித்தேன். அவர் போலீசாரை  விசாரிக்க உத்தரவிட்டார். அவர்கள் முறையாக விசாரிக்கவில்லை. வசிக்கும் வீட்டு உரிமையாளர் என்னை விரட்டி விட்டார். கைக்குழந்தையுடன் மகளிர் போலீஸ், வேலம்பாளையம் போலீஸ் என அலைந்து தற்போது கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளேன். என்னைப் போல இனி மேலும் யாரும் ஏமாறக்கூடாது. பல பெண்களை மோசடி செய்த குணசேகரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது குழந்தையின் எதிர்காலத்தை மீட்டுத்தர வேண்டும். கமிஷனர் அலுவலகத்தில் நாளை துணை கமிஷனரைச் சந்திக்குமாறு தெரிவித்துள்ளனர். என்று கூறினார். 


மேலும் அவர் கூறுகையில், 


முதலில் கேரளாவை சேர்ந்த வனிதா, அவருக்கும் குணசேகரனுக்கும் 7 வயது மகன் உள்ளார். , ஆறு வருடங்களுக்கு முன் கோவையை சேர்ந்த நர்ஸ் செல்லம்மாள் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார், அதன்பிறகு பெருமாநல்லூர் தட்டாங்குட்டையை சேர்ந்த கனகாவை மூன்றாவதாகவும், விழுப்புரத்தை சேர்ந்த ஏற்கனவே திருமணமாகி இருந்த சசிகலா வை நான்காவதாகவும், காளீஸ்வரி என்ற இன்னொருவரின் மனைவியை தனது வீட்டுக்கு அருகில் 5 வதாகவும் திருமணம் செய்து வைத்துக் கொண்டார். 6 வதாக 2022 மார்ச் மாதம் தேவி என்கிற என்னை திருமணம் செய்ததில் ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது 7 வதாக காரைக்குடியை சேர்ந்த சினேகா என்ற கல்லூரி மாணவியுடன் தொடர்பு வைத்துக் கொண்டு அவரை திருமணம் செய்ய முயல்கிறார். குணசேகரன் தாயார் சுப்புலட்சுமி அவரது தவறுகளுக்கு முழுமையாக ஒத்துழைக்கிறார். ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு தொழில் சொல்வார். இவ்வாறு தேவி கூறினார்.
Previous Post Next Post