இட ஒதுக்கீட்டில் பயனடையாத குடும்பத்திற்கு முன்னுரிமை அளிக்க வழிவகை செய்வோம் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்க அரசியல் கட்சிகளுக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை

*இட ஒதுக்கீட்டில் பயனடையாத குடும்பத்திற்கு முன்னுரிமை அளிக்க வழிவகை செய்வோம் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்க அரசியல் கட்சிகளுக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!*              
   நமது நாட்டில்  அழுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் பதவிகள் என பல்வேறு துறைகளில், இடங்களை அவர்களின் பாதிப்பு நிலை அல்லது மக்கள் தொகைக்கேற்ப ஒதுக்கி அவர்களுக்குரிய பிரதிநிதித்துவத்தை பெறச் செய்து, காலப்போக்கில் சமுதாய சமத்துவத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டதே இடஒதுக்கீட்டு என்னும்  திட்டமாகும். அப்படி அழுத்தப்பட்ட மக்கள் இனம், சாதி, சமூகநிலை, மொழி, பாலினம், வாழிடம், பொருளாதாரச் சூழல், மாற்றுத்திறன் போன்றவற்றில், எந்தக் காரணியால் பாதிக்கப்பட்டார்களோ அதே காரணியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பல்வேறு சமூக மக்களுக்கு இட ஒதுக்கீடு சலுகைகள் வழங்கப்பட்டு அதன் மூலம் கல்வி வேலைவாய்ப்பு பொருளாதார வாய்ப்புகள் உறுதி செய்யப்படுகின்றன.     தமிழ்நாட்டில் கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் பொதுப் பிரிவினருக்கு (OC) 31%, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (BC) 26.5%, பிற்படுத்தப்பட்ட இசுலாமியருக்கு (BCM) 3.5% உள் இடஒதுக்கீடும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (MBC) 20%, பட்டியல் சாதியினருக்கு (SC) 15%, பட்டியல் சாதிகளில் ஒன்றான அருந்ததியருக்கு (SCA 3% உள் இடஒதுக்கீடும், பட்டியல் பழங்குடியினருக்கு (ST) 1% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அந்த வகையில் இட ஒதுக்கீட்டின் பலன்களை ஒதுகீடு செய்யப்பட்ட சமூகத்தில்  இன்னும் அடையாத குடும்பங்கள் லட்சக்கணக்கில் இருப்பதை அனைவரும் அறிவோம். இட ஒதுக்கீட்டு பயன்கள்  குறித்த விழிப்புணர்வு அவர்களிடம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒரு சமூகத்தில்  ஒரே குடும்பத்தில் இட ஒதுக்கீட்டினால் கிடைக்கின்ற சலுகைகளை பயன்படுத்தி கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் தொடர்ந்து முன்னேற்றம் பெற்றவர்களோ அல்லது  குடும்பங்கள் மட்டுமே மீண்டும் மீண்டும்  பயன்படுத்திக் கொள்வதை மற்ற அச்சமூக குடும்பங்களுக்கும் விரிவாக்கம் செய்யும் பொறுப்பு அரசினுடையது. இட ஒதுக்கீடு குறித்தும் அதனுடைய பலன்களை எந்தெந்த சமூகத்தினர் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறித்தும் சம்பந்தப்பட்ட சமூக மக்களுக்கு சென்று சேர்க்கின்ற பொறுப்பினை பலனடைந்த அச்சமூக மக்கள் மனதார தாமாக முன்வந்து மேற்கொள்ள  வேண்டும். மேலும் இட ஒதுக்கீட்டினால் கல்வி வேலை வாய்ப்புகளில் இதுவரை எவ்வித பலனையும் பெறாத குடும்பத்தினர் குறித்த கணக்கெடுப்பினை உடனே  செய்து அதனை முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்கு வாய்ப்பினை வழங்குகின்ற முதல் முயற்சியினை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் உண்மையான இட ஒதுக்கீட்டினால் சமூக பொருளாதாரம் மேம்பட்டு சமத்துவமான சமுதாயம்  இருக்கும் என்பது நிதர்சன உண்மை. இட ஒதுக்கட்டால் பலன் பெறுபவர்களே மீண்டும் மீண்டும் பெறுவது என்பது அடுத்தவரின் சலுகையை வளர்ச்சியை தட்டிப் பறிக்கும் செயலுக்கு ஒப்பாகும். ஆகவே பலன்கள் பரவலாக்க அரசும் அனைவரும் பாடுபட வேண்டும்.  அனைத்து அரசியல் கட்சிகளும்  வரும்  பாராளுமன்ற தேர்தல் வாக்குறுதியில்  இடஒதுக்கீட்டில் பயன்பெறாதவர்களுக்கு அனைத்திலும் முன்னுரிமை அளிப்போம் என்று வாக்குறுதி அளிக்க வேண்டும். அதுவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கும் உண்மையான அக்கறையாக அமையும் என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை வைத்துள்ளார்.
Previous Post Next Post