டிரைவிங் லைசன்ஸ் இனி பதிவு தபாலில் தான் அனுப்பப்படும்... முகவரியை உறுதி செய்கிறது போக்குவரத்து துறை

தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அரசாணை எண் (D)738, உள் (போக்குவரத்து-7) துறை நாள் 24.05.2022, அரசாணை எண் (ப) எண் 1050 உள் (போக்குவரத்து-7) துறை நாள் 04.09.2023 மற்றும் போக்குவரத்து ஆணையர், போக்குவரத்து மற்றும் சாலைபாதுகாப்பு ஆணையரகம், சேப்பாக்கம், சென்னை அவர்களின் சுற்றறிக்கை எண்:02/2024 யில் கீழ்க்காணும் தெளிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

a) 28.02.2024 முதல் அனைத்து ஒட்டுநர் உரிமங்கள் மற்றும் பதிவுச் சான்றுகள் விரைவு அஞ்சல் மூலமே அனுப்ப வேண்டும். எக்காரணம் கொண்டும் விண்ணப்பதாரருக்கு நேரடியாக வழங்கக்கூடாது.

b) வாகன் மற்றும் சாரதி மென்பொருளின் தவறான அலைபேசி எண் மற்றும் முகவரி தவறாக குறிப்பிட்டு தபால் துறையினரால் திரும்ப பெற்று இருந்தால் அவற்றை மென் பொருளில் சரிசெய்வதற்கு உரிய விண்ணப்பம் மற்றும் கட்டணம் செலுத்தி, திருத்தம் செய்யப்பட்ட பின்னரே ஓட்டுனர் உரிமம் மற்றும் பதிவு சான்று ஆகியவற்றை விரைவு அஞ்சலில் அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

c) விண்ணப்பதாரர் வெளியூர் சென்று இருந்தாலோ அல்லது வேறு காரணங்களுக்காக அவரது ஓட்டுனர் உரிமம் அல்லது பதிவுச்சான்று தபால் துறை மூலம் திரும்ப பெறப்பட்ட பின்னர் தொடர்புடைய விண்ணப்பதாரர் அலுவலகத்திற்கு வருகை தரும் பட்சத்தில் எக்காரணம் கொண்டும் அவரிடம் நேரடியாக ஒப்படைக்ககூடாது. மாறாக அத்தகைய விண்ணப்பதாரர்களிடமிருந்து உரிய மதிப்பில் அஞ்சல் வில்லைகள் ஒட்டப்பட்ட சுய முகவரியிட்ட தபால் உறையை பெற்றுக் கொண்டு அதன் மூலமாகவே அனுப்பப்பட வேண்டும்.

d) தவறான முகவரியோ அல்லது அலைபேசி எண்ணையோ விண்ணப்பதாரர் மென்பொருளில் பதிவேற்றம் செய்திருந்தால் அதற்கு விண்ணப்பதாரரே முழுபொறுப்பு ஏற்க நேரிடும் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.

எனவே வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் வழங்கப்படும் ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் பதிவுச் சான்றுகள் விரைவு அஞ்சலில் மட்டுமே அனுப்புவது தொடர்பான உத்தரவினை முழுமையாக செயல்படுத்த ஏதுவாக விண்ணப்பதாரர்கள் அவர்தம் உரிய முகவரி மற்றும் அலைபேசி எண் போன்றவற்றை ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் பதிவுச்சான்று தொடர்பான விண்ணப்பங்களில் சரியாக குறிப்பிட்டு அதனை உறுதி செய்து கொண்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு பொது மக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. என அதில் கூறப்பட்டு உள்ளது.

Previous Post Next Post