ஸ்டெர்லைட் : "தமிழக அரசு உறுதியாக உள்ளதால் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை இயங்காது" மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி.!


 ஸ்டெர்லைட் : "தமிழக அரசு உறுதியாக உள்ளதால் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை இயங்காது"  மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி.!

தூத்துக்குடி மாநகராட்சி மாதாந்திர கூட்டத்தில் பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி "ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. நீதிமன்றத்தில் வலுவான வாதத்தை முன்வைத்துள்ளது. எந்த வகையிலும் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் இயங்காது" என தெரிவித்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி மாதாந்திர கூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் அதன் தொடர்புடைய அலுவலக பணிக்கு ஒரு வாகனத்தினை அரசாங்க மின் சந்தை மூலம் நேரடியாக வாங்குவதற்கும் நகர்புற வாழ்வாதார மையத்தின் சேவை கட்டணம் மூலம் மேற்கொள்ளவும் மாமன்ற அனுமதி வேண்டப்படுகிறது உள்பட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்: எதிர்பாராத கன மழையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டிருந்தது. இருந்தாலும், பல்வேறு பணிகளை தொய்வின்றி உங்கள் ஆதரவோடு நிறைவேற்றியுள்ளோம். மத்திய அரசு நிதி கொடுத்தாலும், கொடுக்கவில்லை என்றாலும், தமிழக முதலமைச்சர் தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும், அனைத்துப் பணிகளையும் செய்து கொடுத்தது மட்டுமின்றி பல்வேறு உதவித்தொகைகள் மற்றும் நிவாரணங்கள் வழங்கினார். 

ஏற்கனவே மாநகராட்சி பகுதியில் 1500 சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் மார்ச் 4ம் தேதி 3ம் ஆண்டு தொடக்கப் பணிகளை தொடங்க உள்ளோம். மேலும், புதிதாக 500 சாலைகள் அமைக்கும் பணி வரும் மார்ச் 5ம் தேதி தொடங்கப்படவுள்ளன. அந்த பணிகள் தொடங்கிய பின்பு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும், தொடங்கிய திட்டம் என்பதால் தொய்வின்றி அந்த பணிகள் 60 வார்டுகளிலும் பாரபட்சமின்றி முழுமையாக நடைபெறும். அதில் எந்த இடையூறுகளும் இல்லாத வகையில் அனைவரும் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கி மாநகராட்சியின் வளர்ச்சிக்கு துணை புரிய வேண்டும், என்று மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார். 

பின்னர் ஆணையர் மதுபாலன் பேசுகையில்: உங்கள் அனைவருடைய ஒத்துழைப்பும் அவசியம், உங்களது கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றி கொடுப்பதற்கு நாங்கள் துணை நிற்போம். உரிமையோடு எந்த குறைபாடுகளாக இருந்தாலும் எங்களது கவனத்திற்கு கொண்டு வாருங்கள். தூத்துக்குடியை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று பேசினார்.

கூட்டத்தில், அதிமுக கவுன்சிலர் மந்திரமூர்த்தி பேசுகையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்று மாநகராட்சிக் கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்த மேயர், "ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. நீதிமன்றத்தில் வலுவான வாதத்தை முன்வைத்துள்ளது. எந்த வகையிலும் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் இயங்காது என்றார்.

கூட்டத்தில் இணை ஆணையர் ராஜாராம், பொறியாளர் சரவணன், செயற்பொறியாளர் திட்டம் ரங்கநாதன், உதவி ஆணையர் தனசிங், நகர்நல அலுவலர் சுமதி, சுகாதார ஆய்வாளர்கள் ஹரிகணேஷ், ராஜசேகர், ராஜபாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மண்டல தலைவர்கள் அன்னலெட்சுமி, கலைச்செல்வி, கவுன்சிலர்கள் கீதாமுருகேன், வைதேகி, ஜாக்குலின்ஜெயா, பேபி ஏஞ்சலின், சுப்புலெட்சுமி, சோமசுந்தரி, ஜெயசீலி, விஜயலெட்சுமி, சுதா, கண்ணன், அதிஷ்டமணி, ஜான்சிராணி, மெட்டில்டா, அந்தோணி பிரகாஷ் மார்ஷலின், பாப்பாத்தி, அதிமுக கவுன்சிலர்கள் வெற்றிச்செல்வன், விஜயராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் வெளிநடப்பு 

தூத்துக்குடி மாவட்டம் மழை வெள்ளப் பாதிப்பிற்கு ஆளான நிலையில் பிரதமர் நரேந்திர மோடி எந்த நிதியும் வழங்காமல் தூத்துக்குடிக்கு வருகை தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கவுன்சிலர்கள் சந்திரபோஸ், எடின்டா, கற்பககனி ஆகியோர் கருப்பு உடை அணிந்து எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

செய்தியாளர்- அஹமத்
புகைப்படம் - சித்திக்

Previous Post Next Post